தாய், மகள் உள்பட 3 பேருக்கு கொரோனா பரவியது எப்படி? சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்


தாய், மகள் உள்பட 3 பேருக்கு கொரோனா பரவியது எப்படி? சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்
x
தினத்தந்தி 16 May 2020 8:37 AM IST (Updated: 16 May 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

தாய், மகள் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது எப்படி? என்று சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என 40 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மனைவி, மகள் மற்றும் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த நண்பருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதன் மூலம் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர் களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. காரைக்காலில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். ஜிப்மரில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவுக்கு 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 பேருக்கு தொற்று பரவியது எப்படி?

இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆராய்ந்தோம். பண்ருட்டியைச் சேர்ந்த பெண் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த வார்டில் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் தாயாரும் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதில் பண்ருட்டி, பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அந்த வார்டில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஜிப்மர் மருத்துவமனை சென்று தாயின் உடல்நலனை பார்த்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் ஒட்டியுள்ளது. அவர் மூலமாக அவரின் நண்பரான அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த நபருக்கும் தொற்று பரவியது உறுதியானது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மனைவி, மகள், நண்பர்களுடன் பழகியதன் காரணமாக தற்போது அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கவனமாக இருக்கவேண்டும்

கொரோனா தொற்று எளிதாகவும், வேகமாகவும் பரவக் கூடியது என்பதை மக்கள் இதன் பிறகாவது உணர வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். வருகின்ற 17-ந் தேதிக்கு பின் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்வு இருக்கும். அப்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கடலூர், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு அதிகம் வருவார்கள். நாம் கவனக்குறைவாக இருந்தால் கொரோனா தொற்று வேகமாக பரவும்.

எனவே கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையையோ, கதிர்காமத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையையோ தைரியமாக அணுகலாம். விழிப்புடன் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது முககவசம் அணிதல், கைகளை கழுவுதல் ஆகியவற்றை செய்து கொரோனா பரவுவதை தடுக்கலாம். இல்லை என்றால் இதுவரை சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், நகராட்சி ஊழியர்கள், இணைந்து பணியாற்றியது வீணாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story