மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை கோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது அமைச்சர் பேட்டி


மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை கோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 16 May 2020 3:51 AM GMT (Updated: 16 May 2020 3:51 AM GMT)

கோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது. எனவே மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் ஏழை குடும்பங்களுக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி தனது சொந்த செலவில் கொரோனா நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறி கொண்ட தொகுப்பினை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அதன்படி நகராட்சி கரட்டுப்பாளையம் 31-வது வார்டு பகுதியில் 1,200 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோடை காலத்திற்கு தேவையான 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழக அரசின் வசம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தினால் மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாகத்தான் உள்ளது. நெய்வேலியில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை.

கூடுதல் நிதி

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா நிவாரண நிதியை வழங்கக்கோரி பிரதமரிடம் முதல்-அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மின்வாரிய பணிகளுக்கு 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது தான். அவர்கள் மின்கம்பம் ஏற வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்கள் வேறு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள். கேங்மேன் பணிக்கான தேர்வு நடந்துள்ளது. முடிவுகள் வெளியானவுடன் பணி வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, தாசில்தார் கதிர்வேல், கண்ணகி விழாக் குழு தலைவர் பொன்னுசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story