சிறுமலை பலாப்பழம் சீசன் தொடக்கம் வியாபாரிகள் வராததால் விற்பனை பாதிப்பு
திண்டுக்கல்லில் சிறுமலை பலாப்பழம் சீசன் தொடங்கியது. வியாபாரிகள் வராததால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் சிறுமலை பலாப்பழம் சீசன் தொடங்கியது. வியாபாரிகள் வராததால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுமலை பலா
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் சிறுமலை உள்ளது. இங்கு வனவிலங்குகள் மட்டுமின்றி மூலிகை செடிகளும் அதிகம் காணப்படுகிறது. மேலும் இங்கு எலுமிச்சை, மலை வாழை, பலா மற்றும் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இதில் வாழை, பலா முக்கனியில் இடம்பெற்றுள்ளது.
அதிலும் சிறுமலையில் விளையும் பலாப்பழம் தனிச்சுவையுடன் இருப்பதால், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் வரவேற்பு இருக்கிறது. சிறுமலையில் ஆண்டு முழுவதும் பலாப்பழம் கிடைத்தாலும், மே முதல் ஆகஸ்டு மாதம் வரை சீசன் ஆகும். அதன்படி சிறுமலை பலாப்பழம் சீசன் தற்போது தொடங்கி இருக்கிறது.
விற்பனை பாதிப்பு
இதனால் சிறுமலையில் இருந்து பலாப்பழம் திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளது. பொதுவாக சிறுமலையில் இருந்து வரும் பலாப்பழம், நாகல்நகர் சிறுமலைசெட் பகுதியில் வைத்து ஏலமிடப்படும். அங்கு உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வந்து பலாப்பழத்தை வாங்கி செல்வார்கள். ஆனால், ஊரடங்கால் சந்தைகள் செயல்படுவது தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக ஒருசில வியாபாரிகள் மட்டுமே பலாப்பழம் வாங்குவதற்கு வருகின்றனர். பெரும்பாலான வியாபாரிகள் வராததால் பலாப்பழம் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனைக்கு வந்த பலாப்பழம் சிறுமலைசெட்டில் உள்ள ஒரு குடோனில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீசன் தற்போது தான் தொடங்கி இருப்பதால், பலாப்பழத்தின் வரத்தும் குறைவாகவே இருக்கிறது. இதனால் ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இன்னும் ஒருசில வாரங்களில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்து விடும். அதற்குள் சந்தை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டால் பலாப்பழம் விற்பனை களைகட்ட தொடங்கிவிடும். அதன்மூலம் ஓரளவு லாபமும் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story