திண்டுக்கல் தற்காலிக காய்கறி சந்தையில் சமூக இடைவெளிக்கு டயர்கள்
திண்டுக்கல் தற்காலிக காய்கறி சந்தையில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கும் வகையில் டயர்கள் போடப்பட்டுள்ளன.
திண்டுக்கல்,
திண்டுக்கல் தற்காலிக காய்கறி சந்தையில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கும் வகையில் டயர்கள் போடப்பட்டுள்ளன.
தற்காலிக காய்கறி சந்தை
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டன. இதையடுத்து 2 இடங்களில் மொத்த காய்கறி சந்தைகள், 6 இடங்களில் சில்லறை விற்பனை காய்கறி சந்தைகள் தற்காலிகமாக திறக்கப்பட்டன. இதில் 5 சில்லறை காய்கறி சந்தைகள் மூடப்பட்டு விட்டன.
அதேநேரம் திண்டுக்கல் அரசு எம்.வி.எம். கல்லூரி வளாகம், நத்தம் சாலை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் தலா ஒரு மொத்த காய்கறி சந்தையும், ஒரு சில்லறை காய்கறி சந்தையும் செயல்படுகின்றன. இதில் எம்.வி.எம். கல்லூரி வளாகத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சில்லறை வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் காய்கறி வாங்க வருகின்றனர்.
சமூக இடைவெளிக்கு டயர்கள்
இதனால் தினமும் அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை தற்காலிக காய்கறி சந்தையில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் தினமும் 40-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காய்கறி கடைகளின் முன்பு காய்கறி வாங்க வரும் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு வெள்ளை நிறத்தில் வட்டம் வரையப்பட்டது.
ஆனால், சந்தை அமைந்துள்ள இடம் காலி மைதானம் என்பதால் வெள்ளைநிற வட்டம் எளிதில் அழிந்து விடுகிறது. இதனால் தினமும் வட்டம் வரையும் நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளியில் டயர்கள் போடப்பட்டுள்ளன. காற்று, மழை என எதுவானாலும் டயர் அப்படியே கிடக்கிறது. எனவே, அதில் நின்று காய்கறிகளை வாங்கி செல்லும்படி போலீசார் அறிவுறுத்துகின்றனர். அதன்படி பொதுமக்களும் டயருக்குள் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
Related Tags :
Next Story