போடியில் இருந்து தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு 20 கி.மீ. நடந்து வந்து மனு அளித்த அசாம் வாலிபர்கள்
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு போடியில் இருந்து 20 கி.மீ. நடந்து வந்து அசாம் வாலிபர்கள் மனு அளித்தனர்.
தேனி,
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு போடியில் இருந்து 20 கி.மீ. நடந்து வந்து அசாம் வாலிபர்கள் மனு அளித்தனர்.
20 கி.மீ. நடந்த வாலிபர்கள்
தேனி மாவட்டம், போடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 5 பேர் வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. இதனால், அந்த வாலிபர்கள் வேலையின்றி, வருமானமும் இன்றி பரிதவித்தனர்.
தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி மனு அளிக்க தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். வாகன வசதி எதுவும் இல்லாததால் அந்த வாலிபர்கள் போடியில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு சுமார் 20 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தனர்.
கோரிக்கை மனு
கலெக்டர் அலுவலகம் வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, அந்த வாலிபர்களை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் மனு அளிப்பதற்காக போடியில் இருந்து நடந்து வந்த விவரத்தை தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு தமிழில் எழுத தெரியாததால், அங்கிருந்த போலீசார் உதவியுடன் மனு எழுதினர். பின்னர், அவர்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் போலீசார் அழைத்துச் சென்றனர். அவரிடம், அந்த வாலிபர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
மனு அளித்துவிட்டு வெளியே வந்த வாலிபர்கள் 5 பேருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி உணவு ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்னர் அவர், 5 வாலிபர்களையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்று போடியில் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு கொண்டு சென்று இறக்கி விட்டார். மேலும், அந்த வாலிபர்கள் வேலை பார்க்கும் ஓட்டல் உரிமையாளரையும் போலீசார் அழைத்து அந்த வாலிபர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வரை அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story