திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விசாக திருவிழா நடக்குமா? - பக்தர்கள் எதிர்பார்ப்பு


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விசாக திருவிழா நடக்குமா? - பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 May 2020 4:15 AM IST (Updated: 16 May 2020 10:22 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வருகிற 4-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்குமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக பெருமை பெற்று விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். 

பல ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், சங்க இலக்கியங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்ததுமான இந்த கோவிலில் நடைபெறும் மாசி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா போன்ற விழாக்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பாத யாத்திரையாகவும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.

அப்போது கோவிலில் கடற்கரை மணலை மிஞ்சும் அளவுக்கு பக்தர்கள் குவிந்திருப்பார்கள். சூரபத்மனை வதம் செய்து, இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரையில் எழுந்தருளிய முருக பெருமானை தரிசிக்க கடல் அலையை போன்று, மக்களும் அலை அலையாக வருவார்கள். கோவிலில் மாதந்தோறும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கோவிலில் நித்யகால பூஜைகளை வழக்கம்போல் அர்ச்சகர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் கோவிலில் செயல்படுத்தப்பட்ட மதிய அன்னதான திட்டமும், ஏழைகளுக்கு உதவிடும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தினமும் மதியம், இரவில் தலா 150 பேருக்கு உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, சித்திரை வசந்த திருவிழா போன்ற விழாக்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக திருவிழாவும் வருகிற 4-ந்தேதி நடக்குமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஊழியர்கள் கூறியதாவது:-

விழாக்கள் நடத்த அனுமதி

கொரோனா ஊரடங்கால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் பங்குனி திருவிழா, சித்திரை வசந்த திருவிழா ஆகிய விழாக்களும் ரத்து செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, வருகிற 4-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்குமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளோம்.

மேலும் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளும் திறக்கப்படாததால், அதனை நம்பியுள்ள வியாபாரிகளும் வருமானமின்றி வறுமையில் வாடுகின்றனர். எனவே ஊரடங்கு தளர்வில், கோவிலில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்வதற்கும், விழாக்களை நடத்துவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story