தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் இருந்து 1,389 தொழிலாளர்கள் பீகார் பயணம் - சிறப்பு ரெயிலில் புறப்பட்டு சென்றனர்


தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் இருந்து 1,389 தொழிலாளர்கள் பீகார் பயணம் - சிறப்பு ரெயிலில் புறப்பட்டு சென்றனர்
x
தினத்தந்தி 16 May 2020 10:30 PM GMT (Updated: 16 May 2020 6:22 PM GMT)

தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் இருந்து பீகார் மாநிலத்துக்கு 1,389 தொழிலாளர்கள் நேற்று சிறப்பு ரெயிலில் புறப்பட்டு சென்றனர்.

தூத்துக்குடி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், வேலைவாய்ப்பு இல்லாமலும் தவித்து வந்தனர். இதையடுத்து மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில், மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

அதன்படி, ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பீகாருக்கு 263 பேரும், ஜார்கண்ட் மாநிலத்துக்கு 140 பேரும் நெல்லையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.

சிறப்பு ரெயில்

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து பீகார் மாநிலத்துக்கு ஷார்மிக் என்ற சிறப்பு ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த பீகாரை சேர்ந்த 962 தொழிலாளர்கள், நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 326 தொழிலாளர்கள், தென்காசி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 101 தொழிலாளர்கள் என மொத்தம் 1,389 பேர் பயணம் செய்தனர்.

இந்த தொழிலாளர்கள் அந்தந்த பகுதிகளில் இருந்து உரிய மருத்துவ பரிசோதனைகள் முடித்த பிறகு தூத்துக்குடி ரெயில் நிலையத்துக்கு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். ரெயில்நிலையத்தில், தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன. வெளி மாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை பரிசோதனை செய்து ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். அனைத்து தொழிலாளர்களும் ரெயிலில் ஏறிய பிறகு மதியம் 2 மணி அளவில் ரெயில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சென்றது. தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால் மிகுந்த மகிழ்ச்சியோடு கையசைத்தபடி சென்றனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story