ராமநத்தம், பண்ருட்டி பகுதியில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ராமநத்தம், பண்ருட்டி பகுதியில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 17 May 2020 4:05 AM IST (Updated: 17 May 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம், பண்ருட்டி பகுதியில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடலூர்,

திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் மாயவேல் (வயது 33). இவர் கடந்த 9-ந்தேதி கிராம உதவியாளர் வசந்தா மற்றும் ஊழியர்களுடன் மணல் கடத்தல் தொடர்பாக எழுத்தூர் நல்லதங்காள்கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பெரங்கியம் கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் சக்திவேல் (39), செங்குட்டுவன் மகன் நீலமேகன் (23) ஆகிய 2 பேரும் டிராக்டரில் மணல் கடத்தி வந்தனர். இதை தடுத்து தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மாயவேலை ஆபாசமாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

கைது

இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் மாயவேல் ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் கிளை சிறையில் அடைத்தனர். நீலமேகன் மீது கடந்த ஆண்டு மணல் கடத்தல் வழக்கு உள்ளது. இவர்களின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சக்திவேல்,நீலமேகன் ஆகிய 2 பேரையும் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 2 பேரையும் ராமநத்தம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் கிளை சிறையில் இருக்கும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

பணம் பறிப்பு

இதேபோல் பண்ருட்டி வாலிபர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-

பண்ருட்டி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் பிரபாகரன் (27). இவர் கடந்த 3-ந்தேதி மருந்து வாங்குவதற்காக அங்குள்ள மருந்து கடைக்கு சென்றார். அப்போது திருவதிகை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் தேவா என்கிற தேவநாதன்(26) என்பவர் பிரபாகரனை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரம், செல்போனை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுபற்றி பிரபாகரன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து தேவநாதனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். இவர் மீது பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள், புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆள்கடத்தல் வழக்கும் உள்ளது.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் தேவநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தவிட்டார். இதையடுத்து பண்ருட்டி போலீசார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Next Story