கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுங்கள் - மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா வைரசால் பாதிக்கப்படாத மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தை புரட்டி எடுக்கும் கொரோனா வைரசால் அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா அல்லாமல் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்கப்படாத நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் வக்கீல் காயத்ரி சங் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் பொதுநலன் மனு தாக்கல் செய்தனர்.
அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
செயல் திட்டம் இல்லை
கொரோனா வைரஸ் அல்லாத நோயாளிகள் சிகிச்சை கிடைக்காததன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கு மாநில அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் விரிவான செயல் திட்டம் இல்லை.
வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவ உதவி, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு ஹெல்ப்லைன் உருவாக்கப்பட வேண்டும்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட தேவையில்லாத புறநோயாளிகளுக்கு உதவுவதற்காக கிளினிக்குகள் மற்றும் துணை மருத்துவ சேவைகளை வெவ்வேறு இடங்களில் தொடங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஏ.செய்யது ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் அனில் சக்ரே, கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாநகராட்சி மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர், என்றார்.
உத்தரவு
ஆனால் மனுதாரர்கள் அளித்த சில பரிந்துரைகள் தவிர்க்க முடியாதவை என்றும், அந்த பரிந்துரையை செயல்படுத்தி கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அதிகாரிகளுக்கு யதார்த்தமான பரிந்துரை பட்டியலை சமர்ப்பிக்க மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அந்த பரிந்துரைகளை மாநில அரசும், மாநகராட்சியும் பரிசீலனை செய்து வருகிற 22-ந் தேதி ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story