ஊரடங்கால் பள்ளிகள் மூடல்: விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டும் தனியார் பள்ளி ஆசிரியர் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடமும் நடத்துகிறார்
ஊரடங்கால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டும் தனியார் பள்ளி ஆசிரியர், ஆன்லைன் மூலம் மாணவர் களுக்கு பாடமும் நடத்துகிறார்.
பேராவூரணி,
ஊரடங்கால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டும் தனியார் பள்ளி ஆசிரியர், ஆன்லைன் மூலம் மாணவர் களுக்கு பாடமும் நடத்துகிறார்.
ஊரடங்கால், பள்ளிகள் மூடல்
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். வேலை இல்லாததால் தங்களின் குடும்ப செலவிற்காக வெவ்வேறு தொழிலை நாடிச்சென்ற ஆசிரியர்கள் அதில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது குடும்ப தொழிலான விவசாய தொழிலுக்கு மாறி தனது குடும்பத்திற்கு வருவாயை ஈட்டி வருகிறார். அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடமும் நடத்தி வருகிறார். அவரைப்பற்றி பார்ப்போம்!.
தனியார் பள்ளி ஆசிரியர்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி நீலகண்டபுரத்தை சேர்ந்தவர் விஜய். இவர், பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஒரு தென்னை விவசாயி ஆவார். இவர்களுக்கு சொந்தமாக 2 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் தென்னையை தவிர வாழை சாகுபடியை 2 பேரும் செய்து வந்தனர். ஆனால் இதன் வருமானம் 45 நாட்களுக்கு ஒரு முறையும், ஆண்டுக்கு ஒரு முறையும்தான் கிடைக்கும்.
விவசாயம் செய்து வருமானம்
இதை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமம் என தெரிந்த ஆசிரியர் விஜய், வேறு எங்கும் வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும், பள்ளிகள் மூடப்பட்டதாலும் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வந்தார். இதையடுத்து தன்னுடைய 2 ஏக்கர் தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக அவரை, முள்ளங்கி, வெண்டைக்காய், கத்தரிக்காய், முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை ஆகியவற்றை பயிரிட்டு வளர்த்து வந்தார்.
தற்போது நன்கு வளர்ந்துள்ள கீரைகளை தானே பறித்து ஒரு கட்டு கீரை ரூ.10 என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார். மேலும் 10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவதாக அரசு அறிவித்ததை அடுத்து மாணவர்களை தேர்வுக்கு தயாராகும் வகையில் பள்ளிக்கு சென்று ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடமும் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தினமும் 50 கட்டு கீரைகள் விற்பதால் ரூ.500 கிடைக்கிறது. மேலும் நான் விவசாயம் செய்து வரும் காய்கறிகளான அவரை, கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவைகள் தற்போது பிஞ்சுகள் விட்டு முதிர்வு நிலை அடைந்து வருகிறது. இந்த காய்கறிகளும் முதிர்வு பெற்று விற்பனைக்கு வந்தால் ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை கிடைக்கும். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே பள்ளிகள் திறந்தாலும் நான் ஒருபோதும் விவசாயத்தை கைவிடமாட்டேன். இதில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று தெரிவித்தார்.
தன்னிறைவு பெறும்
என்னதான், ஒரு ஆசிரியராக இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு விவசாயி என்பதை எப்போதும் எனது நினைவில் கொள்வேன் என்று கூறும் இவரைப்போன்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த நாடு நிச்சயம் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
Related Tags :
Next Story