கொரோனா சிகிச்சை மையமாக மாறும் வான்கடே கிரிக்கெட் மைதானம் - மாநகராட்சி கையகப்படுத்துகிறது
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம் கொரோனா சிகிச்சை மையமாக மாறுகிறது. அந்த மைதானத்தை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு மாநகராட்சி கடிதம் எழுதி உள்ளது.
மும்பை,
கொரோனா வைரஸ் பாதிப்பில் மராட்டியம் தான் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே மும்பை மாநகராட்சி, ஒர்லியில் உள்ள தேசிய ஸ்போர்ட்ஸ் கிளப் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் சில உடற்பயிற்சி மைய வளாகங்களில் தனிமைப்படுத்தும் முகாம்களை அமைத்தது.
வான்கடே கிரிக்கெட் மைதானம்
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தை தற்காலிகமாக தங்களிடம் வழங்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது.
அதில், “வான்கடே மைதானத்தை கையகப்படுத்துவது தற்காலிகமானது. அங்குள்ள வசதிகளை பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்தப்படும்.
இதற்கு ஒத்துழைக்க மறுத்தால் மும்பை கிரிக்கெட் சங்கம் போலீஸ் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்கடே மைதான வளாகம் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும், ஏ வார்டை சேர்ந்த மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பு பணிக்காக மைதானத்தை ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார்.
வான்கடே மைதான வளாகத்தில் மைதானத்தை தவிர பி.சி.சி.ஐ. அலுவலகம், கர்வாரே கிளப் ஹவுஸ், மும்பை கிரிக்கெட் சங்க விருந்து மண்டபம் உள்பட பல்வேறு அரங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story