சென்னையில் இருந்து திரும்பிய வாலிபருக்கு கொரோனா: கேரளபுரம் பகுதியை தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணிப்பு
சென்னையில் இருந்து குமரிக்கு வந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருந்தது. இதையடுத்து கேரளபுரம் பகுதியை தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
பத்மநாபபுரம்,
சென்னையில் இருந்து குமரிக்கு வந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருந்தது. இதையடுத்து கேரளபுரம் பகுதியை தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
வாலிபருக்கு கொரோனா
தக்கலை அருகே கேரளபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த 23 வயது வாலிபர் சென்னையில் தனியார் மருந்துக்கடையில் வேலைப்பார்த்து வந்தார். இவர் கடந்த 9-ந் தேதி அவரது உறவினருடன் காரில் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று முன்தினம் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
தனிமைப்படுத்தல்
இதையடுத்து திருவிதாங்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரி ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் வாலிபரின் வீட்டிற்கு சென்று அவரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தந்தை, தாயார், தம்பி மற்றும் அவருடன் ஊர் திரும்பிய உறவினர் ஆகியோரை தனிமைப்படுத்தி, சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் வரும்வரை வெளியே செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
போக்குவரத்துக்கு தடை
மேலும் கேரளபுரம் பகுதியை தனிமைப்படுத்தி அனைத்து சாலைகளும் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. கல்குளம் தாசில்தார் ஜெகதா, தக்கலை துணை சூப்பிரண்டு ராமசந்திரன், திருவிதாங்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா, சுகாதார அதிகாரி ராமதாஸ் ஆகியோர் முகாமிட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடைவிதித்தனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வீடுகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சுகாதார பணியாளர்கள் கேரளபுரம் பகுதியில் கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பவுடர் தூவும் பணிகளை மேற்கொண்டனர். வீடு, வீடாக சென்று யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்பு உள்ளதா? என கணக்கு எடுத்தனர். தற்போது கொரோனா பரவல் அந்த பகுதியில் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு வகையில் வைரஸ் தொற்று பரவி விட கூடாது என அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story