கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறப்பு; மதுபிரியர்கள் உற்சாகம் - நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்
கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
கோவை,
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதனால் பெரும்பாலான கடைகளில் முண்டியடித்துக் கொண்டு மது வாங்கினார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக சமூக இடைவெளியை பின்பற்றாததாலும், நிபந்தனைகள் எதையும் பின்பற்றவில்லை என்று கூறி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கடந்த 9-ந் தேதி முதல் தமிழக அரசு மூடியது. இதை எதிர்த்து தமிழக அரசு டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 295 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் கோவை புறநகர் மாவட்ட பகுதிகளில் 163 கடைகளும், மாநகர பகுதிகளில் 120 கடைகளும் என மொத்தம் 283 கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 12 கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை.
கடந்த 7-ந் தேதி திறந்த போது டாஸ்மாக் கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பான்கள் அப்படியே இருந்தன. நேற்று கடைகள் திறப்பதற்கு முன்பு அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். மேலும் மதுபாட்டில்களை வரிசையில் நின்று வாங்குவதற்காக சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் சமூக இடைவெளி விட்டு நிற்பதற்கு வசதியாக ஒரு மீட்டர் இடைவெளியில் தரையில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன.
மதுபாட்டில்கள் வாங்குவதற்காக கோவையில் உள்ள பெரும்பாலான கடைகள் முன்பு குடிமகன்கள் நின்றிருந்தனர். ஆனால் கடந்த 7-ந் தேதி இருந்த பெருங்கூட்டத்தை போல நேற்று கடை திறந்தபோது கூட்டம் காணப்படவில்லை. ஒரு சில கடைகளில் காலை 10 மணிக்கு முன்பே சிலர் வரிசையில் நின்றிருந்தனர்.
கடை திறந்ததும் சற்று தூரத்தில் மேஜை போட்டு உட்கார்ந்திருந்த டாஸ்மாக் பணியாளர் டோக்கன்களை வினியோகித்தார். இதற்காக நீலம், ஆரஞ்சு, பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா, பிரவுன், சிவப்பு ஆகிய 7 நிறங்களில் டோக்கன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கோவை மாவட்டம் முழுவதும் நேற்று நீல நிற டோக்கன்கள் கொடுக்கப்பட்டன. டோக்கன்களை வாங்கியதும் அதை காண்பித்து மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிமகன்கள் புறப்பட்டனர். சிலர் பெட்டி பெட்டியாகவும், கைநிறைய மதுபாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு 70 டோக்கன் தான் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததால் அந்த 70 டோக்கன்களும் 15 நிமிடங்களில் கொடுக்கப்பட்டன. அவற்றை வாங்கியவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு சென்ற பின்னர் தான் அடுத்து 70 டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டன. முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு மதுபாட்டில்களை கடைக்காரர்கள் வழங்காமல் திருப்பி அனுப்பினார்கள்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் இல்லை. கடந்த 7-ந் தேதி இருந்த கூட்டம் அளவுக்கு இல்லை என்றாலும் கடைகள் திறக்கப்படாத பகுதிக்கு அருகில் உள்ள கடைகளில் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றாலும் சில கடைகளில் அரசு அனுமதித்த 500 டோக்கன்கள் கொடுத்து முடிக்கப்பட்டன. சில கடைகளில் 500 டோக்கன்கள் வாங்க ஆள் இல்லை. அந்த கடைகளில் 300 முதல் 350 டோக்கன்கள் தான் கொடுக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதேபோல் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் பூக்கடை எதிரில் உள்ள 3 டாஸ்மாக் கடைகள், ஓடந்துறையில் 2 டாஸ்மாக் கடைகள் பஸ் நிலையம் அருகே ஒரு டாஸ்மாக் கடை என மொத்தம் 8 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திறப்பதையொட்டி மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மது பாட்டில்கள் வாங்குவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 10 மணிக்கு முன்னரே மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். மது பாட்டில்களை வாங்க வந்த மது பிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கனை பெற்றுக்கொண்ட மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
மேலும், ஒரு சில பெண்களும் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
அதேபோல் சிறுமுகை பகுதியில் 4 டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
Related Tags :
Next Story