குமரிக்கு கொரோனா பரிசோதனை கருவிகள் நாளை வருகிறது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


குமரிக்கு கொரோனா பரிசோதனை கருவிகள் நாளை வருகிறது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 17 May 2020 6:41 AM IST (Updated: 17 May 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்துக்கு கொரோனா பரிசோதனை கருவிகள் நாளை (திங்கட்கிழமை) வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்துக்கு கொரோனா பரிசோதனை கருவிகள் நாளை (திங்கட்கிழமை) வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடை செய்யப்பட்ட பகுதிகள்

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆகும். அவர்களில் 16 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 18 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு பெண் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 5 வயது பெண் குழந்தை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு அமைந்துள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்து வீட்டுக்குச் செல்லாமல் நேரடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்படவில்லை. கடைசியாக எஸ்.டி.மங்காடு, தக்கலை அருகே கேரளபுரம் ஆகிய 2 பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்கள் மும்பை மற்றும் சென்னையில் இருந்து வந்திருந்தனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்களுடைய வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது.

11 பேருக்கு பரிசோதனை

மும்பையில் இருந்து வந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் 6 பேருக்கும், சென்னையில் இருந்து வந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள் 5 பேருக்கும் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், உள்மாவட்டத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் என நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

3 ஆயிரம் கருவிகள்

கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைக்கான கருவிகள் (கிட்) தேவையான அளவு இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குமரி மாவட்ட சுகாதாரத்துறையிடம் தற்போது 500-க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை கருவிகள் இருப்பில் உள்ளன. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்ட கருவிகள் உள்ளன. மேலும் 3 ஆயிரம் பரிசோதனை கருவிகள் சென்னையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அவை நாளை (திங்கட்கிழமை) குமரிக்கு வந்து சேரும். குமரியில் பரிசோதனை கருவிகள் தட்டுப்பாடு இல்லை, என்றனர்.

Next Story