நெல்லை - தென்காசிக்கு மராட்டியத்தில் இருந்து வந்த மேலும் 49 பேருக்கு கொரோனா தூத்துக்குடியில் 8 பேர் பாதிப்பு
நெல்லை, தென்காசிக்கு மராட்டியத்தில் இருந்து வந்த மேலும் 49 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் தூத்துக்குடியில் 8 பேர் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை, தென்காசிக்கு மராட்டியத்தில் இருந்து வந்த மேலும் 49 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் தூத்துக்குடியில் 8 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மராட்டியத்தில் இருந்து நெல்லைக்கு வந்தவர்களில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் நெல்லை மாநகராட்சி மற்றும் மானூர் பகுதியை சேர்ந்த தலா ஒருவர், நாங்குநேரி வட்டாரத்தை சேர்ந்த 30 பேர், பாப்பாக்குடி, தலைவன்விளை பகுதியை சேர்ந்த தலா 4 பேர், வள்ளியூர், திசையன்விளையை சேர்ந்த தலா 2 பேர் ஆகியோர் அடங்குவர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 136 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்து உள்ளது. இவர்கள் தங்கியுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென்காசியில் 61 ஆக அதிகாரிப்பு
தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 56 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மராட்டியத்தில் இருந்து சுப்பையாபுரத்துக்கு வந்த கணவன்-மனைவியும், பாவூர்சத்திரம் அருகே மேலகிருஷ்ணபேரிக்கு வந்த 61 வயது நபர் ஒருவரும் அடங்குவர். மேலும் ஒருவர் கண்டப்பட்டியை சேர்ந்தவர் ஆவார். மேலும், சென்னையில் இருந்து ராஜகோபாலபேரிக்கு வந்த 33 வயது பெண்ணும் ஒருவர். எனவே, தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்து உள்ளது.
தூத்துக்குடியில் 8 பேர் பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் நேற்று கயத்தாறு, கோவில்பட்டி சுப்பிரமணியபுரம், ராமலிங்கபுரம், முறப்பநாடு மற்றும் நெல்லை மாவட்டம் மானூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒரு பெண் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர மேலும் 5 பேர் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story