சிறப்பு ரெயில் மூலம் 1,374 தொழிலாளர்கள் பீகாருக்கு அனுப்பி வைப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் வேலை செய்தவர்கள்


சிறப்பு ரெயில் மூலம் 1,374 தொழிலாளர்கள் பீகாருக்கு அனுப்பி வைப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் வேலை செய்தவர்கள்
x
தினத்தந்தி 17 May 2020 2:10 AM GMT (Updated: 17 May 2020 2:10 AM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் வேலை செய்த 1,374 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழுப்புரம்,

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது வேலையின்றி வருமானமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களை சிறப்பு முகாம்களில் தங்க வைத்து அரசால் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் சொந்த ஊர் செல்ல விரும்பும் வெளிமாநிலத்தினர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து ஆன்லைனில் பதிவு செய்தவர்களை சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தங்கி வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்டிரல், காட்பாடி ரெயில் நிலையங்களில் இருந்து ஜார்கண்ட், மணிப்பூர், ஆந்திரா, மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

1,374 தொழிலாளர்கள் பயணம்

அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தங்கிருந்து வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 247 பேர் கண்டறியப்பட்டனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 197 பேரும், கடலூர் மாவட்டத்தில் தங்கியிருந்த 600 பேரும், அரியலூர் மாவட்டத்தில் தங்கியிருந்த 330 பேரும் ஆக மொத்தம் 1,374 தொழிலாளர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் கண்டறிந்து அவர்களை சொந்த மாநிலமான பீகாருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழக அரசு மூலமாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட தொழிலாளர்கள் அனைவரையும் அவர்களது சொந்த மாநிலமான பீகாருக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வசதியாக விழுப்புரத்தில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சமூக இடைவெளி

இந்த ரெயில் நேற்று இரவு புறப்பட்டது. இதற்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை தனித்தனி பஸ்கள் மூலமாக நேற்று மாலை விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் உணவு, குடிதண்ணீர், முக கவசம், ரெயில் பயணச்சீட்டு ஆகியவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ரெயில் ஏற வசதியாக விழுப்புரம் ரெயில் நிலைய நடைமேடைகள் மற்றும் ரெயில் நிலைய வளாகத்தில் 1 மீட்டர் இடைவெளியில் அடையாள குறியீடுகள் போடப்பட்டிருந்தது. அந்த வட்டத்திற்குள் முப்பது, முப்பது பேராக வரிசையில் நிற்க வைத்து அதன் பிறகே அவர்களை ரெயில் பெட்டிகளில் ஏற போலீசார் ஏற்பாடு செய்தனர்.

வாழ்த்தி வழியனுப்பி வைப்பு

இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து சரியாக இரவு 8 மணிக்கு பீகாருக்கு புறப்பட்டது. அதில் சென்ற அம்மாநில தொழிலாளர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இந்த ரெயில் காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, நாக்பூர், தானப்பூர், ஹஜிப்பூர் வழியாக சென்று நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு பீகார் மாநிலம் பரோனி ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.


Next Story