மதுபிரியர்கள் இன்றி வெறிச்சோடிய டாஸ்மாக் கடை பீர், ஒயின் மட்டும் இருந்ததால் ஏமாற்றம்


மதுபிரியர்கள் இன்றி வெறிச்சோடிய டாஸ்மாக் கடை பீர், ஒயின் மட்டும் இருந்ததால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 17 May 2020 7:46 AM IST (Updated: 17 May 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறந்தும் பீர், ஒயின் மட்டும் இருந்ததால் மதுபிரியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 102 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதையடுத்து தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 70 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இதற்கிடையே 16-ந் தேதி (அதாவது நேற்று) முதல் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 75 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள 8 கடைகளும் திறக்கப்படவில்லை.

மதுபிரியர்கள் இன்றி...

இதனால் நகர பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள், கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு படையெடுத்தனர். ஆனால் அங்கு பீர், ஒயின் ரக மதுபானங்கள் மட்டுமே இருந்தன. அதனை வாங்கி அருந்த விரும்பாத மதுபிரியர்கள், வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைக்கு திரும்பி சென்றனர்.

இதற்கிடையே மதுபிரியர்கள் கடைக்கு வந்து ஏமாறாமல் இருக்க கடை முன்பு ஒலிபெருக்கி வைக்கப்பட்டு, அதன் மூலம் இங்கு பிராந்தி பாட்டில்கள் இல்லை, பீர், ஒயின் மட்டுமே உள்ளது என்றும், அதனால் 4 கிலோ மீட்டர் தொலைவில் ஏர்வாய்ப்பட்டினம், கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு செல்லவும் என ஊழியர் ஒருவர் கூறிக்கொண்டே இருந்தார். இதனால் அந்த டாஸ்மாக் கடைக்கு மதுபிரியர்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story