திருச்சியில் பயங்கரம்: வாலிபர் குத்திக்கொலை ஒருவர் போலீசில் சரண்; மற்றொருவர் தலைமறைவு
திருச்சியில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசில் சரணடைந்தார். மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார்.
மலைக்கோட்டை,
திருச்சியில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசில் சரணடைந்தார். மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாமூல் கேட்டு தொந்தரவு
திருச்சி காந்திமார்க்கெட் போலீஸ் எல்லைக்குட்பட்ட தாராநல்லூர் சூரஞ்சேரி பாரதிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற பிளாக் மணி(வயது 31). இவர், வார பத்திரிகை ஒன்றில் நிருபராக பணியாற்றி வந்தார். அப்பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் மணிகண்டன் மாமூல் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதுபற்றி பேசுவதற்காக அந்த அரிசி ஆலையின் ஊழியர்கள் அஜீத்குமார் (21), ஜான் கிறிஸ்டோபர் ஆகியோர் மணிகண்டனின் வீட்டிற்கு நேற்று மாலை சென்றனர். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்துவந்து அவர்களை குத்த முயன்றதாக கூறப்படுகிறது.
குத்திக்கொலை
இதனால், அதிர்ச்சி அடைந்த அஜீத்குமாரும், ஜான்கிறிஸ்டோபரும் அவரிடம் இருந்து கத்தியை பிடுங்கி, மணிகண்டனை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமார், ஜான் கிறிஸ்டோபர் ஆகியோரை தேடி வந்தனர். இந்தநிலையில் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் அஜீத்குமார் சரணடைந்தார். ஜான் கிறிஸ்டோபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story