கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 May 2020 3:09 AM GMT (Updated: 17 May 2020 3:09 AM GMT)

புதுச்சேரியில் தியேட்டர்கள் இல்லாமல் வணிக வளாகங்களை திறக்கவும், கடைகள், ஓட்டல்களை இரவு 9 மணி வரை திறந்து வைக்கவும் முடிவு செய்து இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 3 முறை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில் மாநில அரசு உத்தரவின் பேரில் கடைகள், ஓட்டல்கள் மாலை 5 மணி வரை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை இரவு 9 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடமாநில தொழிலாளர்கள் பயணம்

புதுவை, காரைக்கால் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்று ரெயில் மூலம் பீகார், உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டு சென்றனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் புதுவை மக்களின் கோரிக்கையை ஏற்று புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் ஊருக்கு செல்வதற்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வார காலத்தில் மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ரெயில் மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்படும். புதுவையில் தங்கி இருந்த சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் உரிய அனுமதியுடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அதைப்போல் வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 1,800 பேரை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேபோல் வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களையும் புதுவை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளறுபடிகள்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 4 நாட்களாக நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கூறிவருகிறார். இன்று (நேற்று) மின்சாரம், அணுசக்தி துறை, விண்வெளி ஆராய்ச்சி துறை, விமான போக்குவரத்து, நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குறிப்பாக ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பொதுத்துறை தனியார் துறையும் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

இதில் இருந்து அனைத்தையும் தனியார்மயமாக்கும் நிலையை மத்திய அரசு இப்போது செயல்பட முனைந்துள்ளது. முக்கியமாக ரகசியமாக இருக்க வேண்டிய சில துறைகளை கூட தனியாரிடம் ஒப்படைக்கும் நிலையை கொண்டு வந்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஆனாலும் சில துறைகளில் அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்புகளை எப்படி மக்களுக்கு கொண்டு செல்ல உள்ளது என்பது போன்ற திட்டங்கள் எதுவும் இல்லை.

குறிப்பாக விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகை எந்த காலத்தில் அவர்களை சென்றடையும் என்று தெரியவில்லை. சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என்பதும் இல்லை. இப்படி பல குளறுபடிகள் அந்தத் திட்டத்தில் உள்ளன. அதனை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். மத்திய நிதி மந்திரி அதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் தெளிவாகக் கூற வேண்டும்.

டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள்

ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இன்றோடு (நேற்று) 54 நாட்கள் ஆகின்றன. நாளையோடு (இன்று) 3-வது கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. புதுவை, காரைக்காலில் தற்போது 8 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மார்ச் மாதம் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்றவர்களில் புதுவையில் 9 பேரும் காரைக்காலில் 2 பேரும் புதுவை திரும்பாமல் டெல்லியிலேயே தங்கியிருந்தனர். அவர்கள் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகின்றனர்.

புதுவை மற்றும் காரைக்கால் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிந்த பின்னர் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.

அமைச்சரவையை கூட்டி முடிவு

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்-அமைச்சர்களோடு காணொலி காட்சியில் உரையாற்றும்போது ஊரடங்கு இருந்தாலும் அதனை தளர்த்த வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார். தற்போது புதுவை மாநிலத்தில் கடைகள், தொழிற்சாலைகளை திறந்துள்ளோம். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் நுழையாத வகையில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். புதுவையில் கொரோனா பரவாமல் இருக்க களப்பணியாளர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் புதுவை மாநிலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு எடுப்போம். ஏற்கனவே பிரதமர் மாநிலங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி புதுவை மாநில கருத்துகளை பிரதமருக்கு அனுப்பியுள்ளோம்.

இரவு 9 மணி வரை...

புதுவையில் கடைகள், ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் சமூக இடைவெளி விட்டு சாப்பிட்டால் அனுமதியளிக்க தயாராக உள்ளோம். சினிமா தியேட்டர்கள் இல்லாமல் வணிக வளாகங்களை (மால்) திறக்கலாம். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து பொருட்கள் வருவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாத அளவில் உத்தரவிடவேண்டும். புதுவை மாநிலத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளியே எடுத்து செல்வதற்கு தடை விதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறியுள்ளோம்.

பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்க காலஅவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளோம். பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு தேர்வு இருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அவர்கள் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். சுற்றுலா பயணிகள் வருகை தற்போது குறைந்துள்ளது. அதனை படிப்படியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துத் துறைகளையும் திறந்துவிட்டு மக்கள் சகஜமாக பொருட்களை வாங்க எங்கள் அரசு தயாராக உள்ளது.

மதுக்கடை திறப்பு எப்போது?

இந்த ஊரடங்கு உத்தரவு பல மாதம் நீட்டிக்கக் கூடாது. இதனால் மாநில நிர்வாகம் பாதிக்கப்படும் என்பதை கூறியுள்ளேன். நாளை(இன்று) மத்திய அரசு அவர்களின் கருத்துகளை கூறுவார்கள் என்று தெரிகிறது. அதன்பின் புதுவை மாநில அமைச்சரவை கூட்டம் கூட்டி எங்கள் முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும். மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு பெற்றுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் மதுக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். மாநிலத்தின் நிதியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story