பீகார், உத்தரபிரதேசத்துக்கு 1,450 வட மாநில தொழிலாளர்கள் பயணம் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்


பீகார், உத்தரபிரதேசத்துக்கு 1,450 வட மாநில தொழிலாளர்கள் பயணம் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 17 May 2020 8:42 AM IST (Updated: 17 May 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தங்கி இருந்து தொழிற் சாலைகளில் வேலைபார்த்து வந்த 1,450 தொழிலாளர்கள் பீகார், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதுச்சேரி,

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தொழிலாளர்கள் தவிப்பு

இதன் காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. தொழிற்சாலைகள், கம்பெனிகள் மூடப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி புதுவை மாநிலத்தில் தங்கி இருந்து இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலைபார்த்து வந்த ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்து, இதற்காக அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். மேலும் மத்திய ரெயில்வே துறை மந்திரியை தொடர்பு கொண்டு புதுவை மாநிலத்தில் இருந்து ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

காரைக்காலில் இருந்து சிறப்பு ரெயில்

அதன்பேரில் முதற்கட்டமாக புதுவை, காரைக்காலில் தங்கியுள்ள பீகார், உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி காரைக்காலில் இருந்து சிறப்பு ரெயில் நேற்று மாலை 6 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயிலை அமைச்சர் கமலக்கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 300-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பயணம் செய்தனர். முன்னதாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

புதுவையில் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசு பஸ்கள் மூலம் நேற்று மதியம் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு 1,150-க்கும் மேற்பட்டோர் தங்கள் உடமைகளுடன் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களில் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை முககவசம் அணியும்படி வலியுறுத்தினர். தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைத்தனர்.

மருத்துவ பரிசோதனை

பின்னர் ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனையை முடித்த பின்னர் போலீசார் அவர்களை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள கேலரியில் அமர வைத்தனர். அங்கு அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று இரவு அவர்கள் அங்கிருந்து புதுச்சேரி ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கும் சமூக இடைவெளி விட்டு அவர்கள் அமர வைக்கப்பட்டனர். காரைக்காலில் புறப்பட்ட சிறப்பு ரெயில் இரவு 11.15 மணிக்கு புதுவை வந்தது. அந்த ரெயிலில் மூலம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Next Story