ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையிலும் வெறிச்சோடி காணப்படும் செல்போன் கடைகள்


ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையிலும் வெறிச்சோடி காணப்படும் செல்போன் கடைகள்
x
தினத்தந்தி 17 May 2020 4:13 AM GMT (Updated: 17 May 2020 4:13 AM GMT)

திருப்பூரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையிலும் செல்போன்-நகைக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கையில் பணம் இல்லாததால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அனுப்பர்பாளையம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருப்பூரில் அனைத்து தொழில் நிறுவனங்களும், அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால் 34 வகையான கடைகளை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி முதல் செல்போன், கணினி உள்பட தனிக்கடைகளும், 12-ந்தேதி முதல் நகைக்கடைகள் உள்பட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வரத்தொடங்கி உள்ளதால் திருப்பூரில் ஓரளவு இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனாலும் 40 நாட்களுக்கு மேலாக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பலர் உணவுக்கு கூட வழியில்லாமல் திண்டாட்டத்தில் இருந்தனர். மக்கள் இன்னும் முழுமையாக பணிக்கு சென்று சம்பாதிக்க தொடங்கவில்லை.

கடைகள் வெறிச்சோடியது

இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை வாங்குவதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் குடும்ப செலவுக்கே பணம் இல்லாத சூழலில் இருப்பதால் அத்தியாவசியம் இல்லாத மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதேபோல் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்தும் குறைவாகவே காணப்படுகிறது.

தற்போது திருப்பூரில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் கடைகள் அனைத்தும் வெறிச்சோடியே காணப்படுகிறது. குறிப்பாக திருப்பூரில் எப்போதும் கூட்டமாகவே காட்சியளிக்கும் செல்போன் கடைகள் மற்றும் நகைக்கடைகள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக பெரிய செல்போன் கடைகளில் நாள் ஒன்றுக்கு தவணையில் மட்டும் 15 செல்போன்கள் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

6 மாதமாகும்...

ஆனால் தற்போது 3 முதல் 5 செல்போன்களை விற்பனையாகிறது என்று செல்போன் கடை ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்தாலும் அதை சார்ந்து நூற்றுக்கணக்கான தொழில்கள் திருப்பூரில் உள்ளன.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு செயல்பட தொடங்கி இருந்தாலும், தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள 6 மாத காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.


Next Story