தனிமைப்படுத்தி கண்காணிக்க மராட்டியத்தில் இருந்து வருபவர்களின் செல்போனில் புதிய செயலி பதிவிறக்கம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


தனிமைப்படுத்தி கண்காணிக்க மராட்டியத்தில் இருந்து வருபவர்களின் செல்போனில் புதிய செயலி பதிவிறக்கம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 17 May 2020 11:43 AM IST (Updated: 17 May 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வருபவர்களின் செல்போன்களில் புதிய செயலி முறை பதிவிறக்கம் செய்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவகங்கை, 

மராட்டிய மாநிலம் மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தமிழர்களை அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு அம்மாநில அரசு அனுப்பி வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு மட்டும் மொத்தம் 141 பேர் வர உள்ளனர். இதில் முதல் குழுவில் வந்தவர்களில் 10பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் தற்போது சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர அந்த மாநிலத்தில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லாதவர்களை மட்டும் வீட்டிற்கு அனுப்பப்படும். இவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள். மேலும் தற்போது மராட்டிய மாநிலத்தில் இருந்து வருபவர்களை செயலி மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அங்கிருந்து வரும் நபர்களின் செல்போன்களில் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்படும். அதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் செல்லாதபடி சிவகங்கையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுவார்கள். மேலும் ஏற்கனவே அங்கிருந்து வந்தவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர சிவகங்கையில் ஏற்கனவே செயல்பட்ட தலைமை மருத்துவமனை இருந்த இடத்தில் கொரோனா தனிமைப்படுத்தும் மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒருவார காலத்திற்குள் இந்த மருத்துவமனை அங்கு செயல்பட தொடங்கும். தற்போது உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வழக்கம்போல் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி உடனிந்தார்.

Next Story