சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தமிழகத்தில் மூடப்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளும், கடந்த 7-ந் தேதி சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் திறக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால், டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 35 டாஸ்மாக் கடைகளில் 24 கடைகளும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 53 கடைகளில் 21 கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கு முன்னதாகவே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்து கூடினர். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கி மது விற்கப்படும் என்றும், மது வாங்க வருபவர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்ததால் போலீசார், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மது பிரியர்களுக்கு டோக்கன் வழங்கினர்.
ஒவ்வொரு நாளும் ஒரு நிறத்தில் டோக்கன் வழங்கப்படும் என்பதால், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நேற்று நீல நிறத்திலான டோக்கன்கள் ஒரு மணி நேரத்திற்கு 70 மது பிரியர்களுக்கு வழங்கப்பட்டது. டோக்கனை பெற்றுக்கொண்ட மது பிரியர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் சமூக இடைவெளி விட்டு வட்டத்தில் நிற்குமாறு அறிவுறுத்தினர். அக்னி வெயில் சுட்டெரித்ததால் மது பிரியர்களில் சிலர் குடை பிடித்து கொண்டும், ஹெல்மெட் அணிந்து கொண்டும் வரிசையில் நின்றதை காணமுடிந்தது.
சரியாக காலை 10 மணியளவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்களின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. இதையடுத்து வரிசையாக சென்று மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி கொண்டு இன்முகத்துடன் சென்றனர். மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் மது வாங்க மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால், நேற்று மட்டும் ஒரே நாளில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்றிருக்கலாம் என டாஸ்மாக் கடை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீன்சுருட்டி பகுதியில் 3 கடைகள் இயங்கி வந்த நிலையில், நேற்று நெல்லித்தோப்பு மற்றும் பாப்பாக்குடி கடைகள் மட்டுமே செயல்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபிரியர்கள் குறைந்த அளவிலேயே வந்து சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்களை மதுபிரியர்கள் வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story