கர்நாடகத்தில் 4-வது கட்ட ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி இன்று நடக்கும் மந்திரி சபை கூட்டத்தில் இறுதி முடிவு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் 4-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் மந்திரி சபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்பட இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கம் 21 நாட்கள் அமல்படுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் 14-ந் தேதி முதல்கட்ட ஊரடங்கு முடிவடைந்தது. ஆனால் ஊரடங்கு 2-வது கட்டமாக கடந்த 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கு 3-வது கட்டமாக 17-ந் தேதி வரை (நேற்று வரை) நீட்டிக்கப்பட்டது. 18-ந் தேதி (அதாவது இன்று) முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொது முடக்கம் 4-வது கட்டமாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்தார். இதற்கான வழிகாட்டுதல் சில நாட்களில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். இந்த ஊரடங்கு நீட்டிப்பு முன்பு போல் அல்லாமல், சற்று வித்தியாசமாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
இதற்கிடையே தமிழ்நாடு, மராட்டியம், பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்கள் பொது ஊரடங்கை நீட்டித்து, அதிகளவில் தளர்வுகளை வழங்கியுள்ளன. அதே போல் கர்நாடகத்திலும், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டுதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள 3-வது கட்ட ஊரடங்கை அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அல்லது 19-ந்தேதி (நாளை) நள்ளிரவு 12 மணி வரை அதாவது மேலும் 2 நாட்கள் நீட்டித்து தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பிறப்பிதுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2-ந் தேதி ஊரடங்கை நீட்டித்து வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்து துறைகளின் தலைவர்கள், கொரோனாவை தடுக்க தற்போது அமலில் உள்ள ஊரடங்கை அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அல்லது 19-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. கடந்த 2-ந் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அனைத்து அதிகாரிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
4-வது கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு நேற்று மாலை தாமதமாக வெளியிட்டது. இதனால் கர்நாடக அரசு 3-வது கட்ட ஊரடங்கை மேலும் 2 நாட்கள் நீடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரிசபை கூட்டத்தில் இறுதி முடிவு
இந்த நிலையில் நேற்று இரவு முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடகத்தில் 4-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி மந்திரி சபை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அதில், 4-வது கட்ட ஊரடங்கு தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கர்நாடகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக மே 18-ந்தேதி (அதாவது இன்று) காலை 11 மணிக்கு மந்திரிசபை கூட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மந்திரிகள், மூத்த அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். இதில் 4-வது கட்ட ஊரடங்கு தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல் பற்றி ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story