கோவையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு; வாகனங்கள் சேதம்


கோவையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு; வாகனங்கள் சேதம்
x
தினத்தந்தி 18 May 2020 8:16 AM IST (Updated: 18 May 2020 8:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் சேதமடைந்தது.

கோவை,

கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய புயல் உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இதன்காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கோவையில் நேற்று மதியம் வரை வெயில் அடித்தது. பின்னர் மதியம் 2 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கோவை மாநகர் மட்டுமின்றி ஜி.என்.மில்., கோவைப்புதூர், சுந்தராபுரம், பேரூர், உக்கடம், குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக கோவை டவுன்ஹாலில் உள்ள சிக்னல் கம்பம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும் உக்கடம் பெரியக்குளம் கரையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாலையில் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கோவைப்புதூர், சுந்தராபுரம், பூமார்க்கெட், சிவானந்தா காலனி, டாடாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்களும் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வளைந்தன. இதனால் பல இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோவைப்புதூர் பகுதியில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த 50 அடி நீள சுற்றுச்சுவர் காற்றுக்கு தாக்குப்படிக்காமல் அப்படியே சரிந்தது. அப்போது அருகில் யாரும் இல்லாதால், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கோவை சுந்தராபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் மரங்கள் சாய்ந்தன. வீடுகளின் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

கோவை ஆடீஸ் வீதியில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மரம் ஒன்று விழுந்தது. இதில் அந்த ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. இதேபோல் கோவை ராம்நகரில் வீடு மீது மரம் விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். கோவை மாநகரில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித் தனர்.

கோவை டாடாபாத் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் சாய்ந்தது தடுப்பு சுவர் மற்றும் கார்மீது விழுந்தது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது.

மேலும் தடுப்பு சுவர் விழுந்ததில் அந்த காரின் முன்பக்கம் நொறுங்கியது. ராம்நகர், டாடாபாத் உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், சரக்கு வாகனங்கள், சரக்கு ஆட்டோக்கள் மீது ஏராளமான மரங்கள் விழுந்தன. இதனால் அந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர்.

உக்கடம் லாரி பேட்டையில் காய்கறி சந்தை அமைப்பதற்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கூடாரங்கள் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மொத்தமாக சரிந்தது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்தப்படி ஓடினர். குறிச்சி பகுதியில் பெய்த மழையால் அங்கு உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. குறிச்சி காந்திஜி ரோட்டில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். அவினாசிரோடு, உக்கடம், டாடாபாத், பூமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள், போலீஸ் நிழற்குடைகள் சூறாவளி காற்றினால் சாய்ந்தன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக வாலாங்குளம் குளக்கரையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் காற்றில் பறந்து சாலையில் விழுந்தன. மேலும் பல இடங்களில் கடைகளுக்கு முன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளும் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழுந்தன.

கோவையில் பெய்த கோடை மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. கோவையில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story