வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் கிராமப்பகுதிக்கு சென்று பொதுமக்கள் குறைகளை கேட்க வேண்டும் - கலெக்டர் சிவன்அருள் உத்தரவு


வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் கிராமப்பகுதிக்கு சென்று பொதுமக்கள் குறைகளை கேட்க வேண்டும் - கலெக்டர் சிவன்அருள் உத்தரவு
x
தினத்தந்தி 18 May 2020 3:45 AM IST (Updated: 18 May 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள்சென்று பொதுமக்ககளின் குறைகளை கேட்டறிந்து தீர்க்கவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் பேசியதாவது:-

கொரோனாவைரஸ் காரணமாக வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரையும் கண்காணிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். 208 அலோபதி மருந்து வழங்கப்பட்டு உள்ளது. அதனை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து ஊராட்சிகளிலும் தடுப்பு மருந்து தொடர்ந்து அடிக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் தொடங்கப்பட வேண்டும். குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி கிராமப்பகுதிகளுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்க்க வேண்டும்.

பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருவதை தடுக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறை மூலம் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது தீர்வு காண வேண்டும். அரசு அலுவலகத்தில் சமூக இடைவெளி விட்டு பணிகள் நடைபெற வேண்டும். அரசு அலுவலர்கள் வர போக்குவரத்து வசதி செய்து தரப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் தொடங்கப்பட வேண்டும். குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அருண் உள்பட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story