காங்கேயநல்லூர் டாஸ்மாக் கடையில், பூட்டை உடைத்து மதுபாட்டில்கள், பணம் திருட்டு - அங்கேயே ஆசைதீர குடித்துவிட்டும் சென்றுள்ளனர்


காங்கேயநல்லூர் டாஸ்மாக் கடையில், பூட்டை உடைத்து மதுபாட்டில்கள், பணம் திருட்டு - அங்கேயே ஆசைதீர குடித்துவிட்டும் சென்றுள்ளனர்
x
தினத்தந்தி 17 May 2020 9:30 PM GMT (Updated: 18 May 2020 4:59 AM GMT)

காங்கேயநல்லூர் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள், கடையிலேயே ஆசைதீர மதுகுடித்துவிட்டும் சென்றுள்ளனர்.

காட்பாடி, 

வேலூரை அடுத்த காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உயர் ரக மதுபானங்கள் விற்கும் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கு காலத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நேற்று முன்தினம் 2-வது முறையாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. வண்ண வண்ண டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டு தினந்தோறும் 500 பேருக்கு மட்டும் மதுபானம் வழங்க வேண்டும் என்ற உத்தரவுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் ஒரு சில கடைகளை தவிர்த்து மற்ற டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு டோக்கன் முறையில் மதுபான விற்பனை நடந்தது. இந்தநிலையில் காங்கேயநல்லூர் பகுதியில் உயர் ரக மதுபானங்கள் விற்கும் எலைட் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.

நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உயர்ரக மதுபானங்கள் மற்றும் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இது குறித்து கடை ஊழியர்கள் விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கடைகளில் மதுபானங்களை திருடிய மர்ம நபர்கள் சில மதுபானங்களை திறந்து ஆசை தீர அங்கேயே குடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதன் மானிட்டரை அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளனர்.

கடையில் திருட்டு போன உயர் ரக மதுபானங்களின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரூ.25 ஆயிரத்தையும் திருடிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story