வேலூரில், விதிமுறைகளை பின்பற்றாத 50 கடைகள் மூடல் - அதிகாரிகள் நடவடிக்கை
வேலூரில் கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாத 50 கடைகளை அதிகாரிகள் மூடினர்.
வேலூர்,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள், ஓட்டல்கள், உணவகங்கள் போன்றவை மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மோசமானது. இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை மேற்கொண்டது. அதன்படி டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், சிமெண்டு கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 47 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர் கடந்த 11-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் டீக்கடை, சாலையோர தள்ளுவண்டி ஒட்டல்கள், பேக்கரி கடை, பழக்கடை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள், செல்போன் விற்பனை கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சிறிய ஜவுளிகடைகள் போன்றவை திறக்கப்பட்டு வியாபாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் வேலூரில் பல இடங்களில் கடைகளில் ஏ.சி. பயன்பாடு அதிகமாக உள்ளதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து அவரது தலைமையில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், 2-ம் மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், மற்றும் போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அண்ணாசாலையில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையப்பகுதியில் இருந்து தொரப்பாடி வரை அண்ணாசாலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பல்வேறு கடைகளில் ஏ.சி. பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பல கடைகளில் அரசு கூறிய எந்த நிபந்தனைகளையும் பின்பற்றாமல் இருந்தனர். இதனால் வைரஸ் தொற்று பரவ அதிகம் வாய்ப்பிருந்தது அவர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து ஏ.சி. பயன்படுத்திய கடைகளை அதிகாரிகள் உடனடியாக மூட உத்தரவிட்டனர். கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். செல்போன் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகள், சிறிய துணிக்கடைகள் என சுமார் 50 கடைகளை மூடப்பட்டன.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக ஆய்வு செய்து கொண்டிருந்ததை அறிந்த பல கடைக்காரர்கள் தங்களது கடைகளையும் மூடிவிட்டனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் பல கடைகளில் ஏ.சி.பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவும். மேலும் பல்வேறு கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. அதற்கான ஏற்பாடுகளை கடைக்காரர்கள் செய்யவில்லை. எனவே கடைகள் மூடப்பட்டன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை கடையின் சார்பில் செய்திருக்க வேண்டும். மேலும் கடைகளில் பணிபுரிபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். இதுபோன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணாசாலை உள்பட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story