ஊரடங்கு படிப்படியாக தளர்வு: விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தது


ஊரடங்கு படிப்படியாக தளர்வு: விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தது
x
தினத்தந்தி 18 May 2020 11:15 AM IST (Updated: 18 May 2020 11:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால் விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. மேலும் விற்பனையிலும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர், 

கடந்த மார்ச் 24-ந்தேதி ஊரடங்கு அறிவித்தபோது அத்தியாவசிய பொருட்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருவதில் தடை ஏற்பட்டது. இதனால் விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து, பருப்பு, மல்லி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. உணவு பொருள் உற்பத்தி ஆலைகளும் முடங்கியிருந்ததால் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதால் விலை உயர்வு ஏற்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட் களை வாங்கி இருப்பு வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியதால் பொருட்களின் விற்பனையில் விறுவிறுப்பு இருந்தது.

இந்த நிலையில் அடுத்தடுத்த ஊரடங்கு நீட்டித்தாலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பொருட்களின் வரத்து அதிகரித்தது. இதனால் பொருட்களின் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததாலும் பொருட்களின் விற்பனை குறைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது விருதுநகர் மார்க்கெட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. உளுந்து 100 கிலோவுக்கு ரூ.800 விலை குறைந்து ரூ.7,200 ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,500 ஆகவும் விற்பனையானது. துவரை 100 கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் விலை குறைந்து ரூ.6 ஆயிரம் ஆகவும், துவரம் பருப்பு ரூ.9 ஆயிரமாகவும் விற்பனையானது. பாசிப்பயறு 100 கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் விலை குறைந்து ரூ.9 அயிரமாகவும், பாசிப்பருப்பு ரூ.11 ஆயிரமாகவும் விற்பனையானது.

முண்டு வத்தல் குவிண்டாலுக்கு ரூ.1000 குறைந்து ரூ.13 ஆயிரமாகவும், நாட்டு வத்தல் ரூ.12 ஆயிரமாகவும், ஏசி வத்தல் ரூ.11 ஆயிரமாகவும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோவுக்கு ரூ.500 விலை குறைந்து ரூ.3,500 ஆகவும் நாடு ரகம் ரூ.2,725 ஆகவும் விற்பனையானது. பட்டாணி 100 கிலோ ரூ.6 ஆயிரமாகவும், பட்டாணி பருப்பு ரூ.6,700 ஆகவும் விற்பனையானது.

நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4,703 ஆகவும், கடலை எண்ணெய் ரூ.2,650 ஆகவும், நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.6,650 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4,900 ஆகவும், எள் புண்ணாக்கு 65 கிலோ ரூ.1,700 ஆகவும் விற்பனையானது. பாமாயில் 15 கிலோவுக்கு ரூ.140 விலை குறைந்து ரூ.1,150-க்கு விற்பனையானது.

சீனி குவிண்டாலுக்கு ரூ.480 விலை குறைந்து ரூ.3,620 ஆகவும், பொரிகடலை 55 கிலோ ரூ.380 விலை குறைந்து ரூ.3670 ஆகவும், விற்பனையானது. இதேபோன்று இதர அத்தியாவசிய மளிகை பொருட்களுக்கும் விலை குறைந்துள்ளது. 4-வதாக ஊரடங்கு மே 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பொருட்கள் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப் படுகிறது.

Next Story