மும்பை, சென்னையில் இருந்து வந்தவர்கள் உள்பட மதுரையில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா
மும்பை, சென்னையில் இருந்து வந்தவர்கள் உள்பட மதுரையில் ஒரே நாளில் நேற்று 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை,
மதுரையில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 6 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
மொத்தமுள்ள 13 பேரில் 4 பேர் பெண்கள், 9 பேர் ஆண்கள். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-
மதுரை கருங்காலக்குடி பகுதியை சேர்ந்த 19 வயது நபர், வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த 24 வயது நபர், கரிசல்குளம் பகுதியை சேர்ந்த 60 வயது நபர் ஆகியோர் மும்பை மற்றும் கர்நாடகத்தில் இருந்து மதுரை வந்திருந்தவர்கள். இவர்கள் 3 பேரையும் மதுரை மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பு முகாம்களில் சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு 2-வது கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மற்றொருவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளர். இவரது வயது 21. இவர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பணியாற்றி வந்த நிலையில் அங்குள்ள நோயாளிகளிடமிருந்து இவருக்கு நோய்த்தொற்று பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றவர்கள் மதுரை செல்லூர், வண்டியூர், விளாங்குடி, அவனியாபுரம், எழுமலை, சொக்கலிங்கபுரம், பேரையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ப்பிணி ஆவார்.
இவர்களில் 4 பேர் சென்னையில் இருந்து மதுரை வந்ததாகவும், மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது இவர்கள் 13 பேரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160-ஆக உயர்ந்துள்ளது. அவர்களுடன் சேர்த்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 49-ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்த 107 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மதுரை வில்லாபுரம், விளாச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மேலும் 2 பெண்கள் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story