தேனியில் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் மது வாங்க 2 மணி நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்
தேனியில் கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் மது வாங்குவதற்காக வந்த மதுப்பிரியர்கள் 2 மணி நேரம் தரையில் அமர்ந்து காத்திருந்தனர்.
தேனி,
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி தேனி மாவட்டத்தில் 55 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் நேற்று முன்தினம் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஒவ்வொரு கடையிலும் 500 டோக்கன்கள் வீதம் வழங்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 53 கடைகளில் 500 டோக்கன்களும், 2 கடைகளில் 500 டோக்கன்களுக்கு குறைவாகவும் வினியோகம் செய்யப்பட்டன.
2-வது நாளான நேற்றும் மதுபான கடைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தேனி புறவழிச்சாலையில் உள்ள மதுக்கடையில் சுமார் 300 மீட்டர் தூரம் வரை மதுப்பிரியர்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்கினர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் சாலை வரை வரிசை நீண்டது. இதையடுத்து சாலை வரை வரிசையில் நிற்க வைத்து விட்டு மற்றவர்கள் மதுக்கடை முன்பு சமூக இடைவெளியுடன் தரையில் அமர வைக்கப்பட்டனர்.
இதற்காக அங்கு சமூக இடைவெளியுடன் அமர்வதற்கு கோடுகள் போடப்பட்டு இருந்தன. அந்த கோடுகளில் மதுப்பிரியர்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது கோடை வெயில் கொளுத்தியது. ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் 2 மணி நேரம் வெயிலில் தவிப்புடன் தரையில் அமர்ந்து இருந்தனர். கூட்டம் குறையத் தொடங்கிய பின்னர் வரிசையில் நிற்க அவர்களை போலீசார் அனுமதித்தனர். அதன்பிறகு மேலும் ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கி சென்றனர்.
அதுபோல் பூதிப்புரம், கொடுவிலார்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுக்கடைகளிலும் நேற்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மதுக்கடைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் ஒலிபெருக்கி மூலம் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அறிவுரைகள் வழங்கியபடி இருந்தனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வரிசையில் நின்று மதுபானத்தை வாங்கிச் சென்றனர். சிலர் மொத்தமாக வாங்கிக் கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story