போடியில் பரபரப்பு: தனிமைப்படுத்தும் முகாமில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - மராட்டியத்தில் இருந்து வந்தவர் வீடு திரும்ப முடியாததால் விபரீதம்
மராட்டியத்தில் இருந்து வந்த நிலையில் போடியில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் சசிக்குமார் (வயது 20). இவர் மராட்டியத்தில் மின்சாதன பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக மராட்டியத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். பின்னர் அவர் கடந்த 15-ந்தேதி தேனி மாவட்டத்துக்கு வந்தார்.
ஆண்டிப்பட்டி சோதனை சாவடியில் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து சளி, ரத்த மாதிரி எடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அவர் போடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
அந்த முகாமில் அவருடன் மேலும் 150 பேர் தங்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளி மாநிலம் மற்றும் சிவப்பு மண்டல மாவட்டங்களில் இருந்து திரும்பி வந்தவர்கள். முகாமில் தங்கி இருந்த சசிக்குமார் தனது வீட்டுக்கு செல்ல முடியாத விரக்தியில் இருந்தார்.
ஏற்கனவே அவர் மராட்டியத்திலும் சில நாட்கள் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவருக்கான பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் மேலும் சில நாட்கள் அவர் முகாமில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று தான் தங்கி இருந்த அறையில் யாரும் இல்லாத நேரத்தில் போர்வையால் சசிக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் அறைக்கு திரும்பிய போது அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிமைப்படுத்தும் முகாமில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story