மதுரை அருகே பயங்கரம்: நடுரோட்டில் இரட்டைக்கொலை - மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளக்காதல் ஜோடியை வெட்டிக்கொன்ற கும்பல்
மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளக்காதல் ஜோடியை வெட்டிக் கொன்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் இருந்து தெற்கு தெரு செல்லும் நாயக்கர்பட்டி ரோட்டில் பெரிய கண்மாய் மடை உள்ளது. அதன் அருகே நேற்று காலை 8 மணி அளவில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
கழுத்து அறுபட்டும், கை உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உடல்கள் கிடந்தன. இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட 2 பேர் பற்றிய விவரம் தெரியவந்தது. அவர்கள் இருவரும் தெற்குதெரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அய்யணன் மகன் அன்புநாதன் (வயது 27), விமல் மனைவி ஆயம்மாள்(26) என்றும் தெரியவந்தது.
அன்புநாதனுக்கு திருமணம் ஆகவில்லை. ஆயம்மாளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்தான் அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானதும், அவர்கள் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கள்ளக்காதலை கைவிடாத அன்புநாதனையும், ஆயம்மாளையும் தீர்த்துக்கட்டுவதற்காக ஒரு கும்பல் திட்டம் தீட்டி கண்காணித்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பின்தொடர்ந்து சென்றோ அல்லது தனியாக வரவழைத்தோ படுகொலை செய்து இருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரியவருகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் ஆயம்மாளின் அண்ணன் தமிழ்மாறனும், உறவினர்களும் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தமிழ்மாறன்(29) மேலூர் யூனியன் தி.மு.க. கவுன்சிலர் ஆவார். யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்றும் தெரியவருகிறது.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
சம்பவ இடத்தில் கிடந்த அன்புநாதனின் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கடைசியாக அவர் செல்போனில் யார்-யாரிடம் பேசியுள்ளார் என விசாரித்து கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சண்முகபாண்டியன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story