ஊரடங்கு தளர்வு எதிரொலி: திண்டுக்கல் பஸ்நிலையத்தை புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடக்கம்
ஊரடங்கு தளர்வு காரணமாக திண்டுக்கல் பஸ்நிலையத்தை புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்துக்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால், பஸ்கள் நின்று செல்வதற்கும், பயணிகள் அமருவதற்கும் போதிய இடவசதி இல்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் பஸ்நிலையத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதேபோல் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் இல்லை.
இதையடுத்து ரூ.5 கோடியில் பஸ்நிலையத்தை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் பழனி, திருச்சி பஸ்கள் நிறுத்தப்படும் பகுதி இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுகிறது. மேலும் கரூர், சேலம் பஸ்களை நிறுத்துவதற்கு புதிய நிறுத்துமிடம் கட்டப்படுவதோடு, இருச்சக்கர வாகன நிறுத்துமிடமும் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து பஸ்நிலையத்தை புதுப்பிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே கட்டுமான பணிகளுக்கு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து பஸ்நிலையத்தை புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. பஸ்நிலையத்தில் சிமெண்டு தரைத்தளம் அமைத்தல், பழமையான கட்டிடங்களை இடித்து அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒருசில மாதங்களில் பணிகள் நிறைவுபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story