சொந்த ஊருக்கு செல்ல ரெயில் நிலையத்துக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்
சொந்த ஊருக்கு செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில் நிலையத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்பாலைகள், செங்கல் சூளைகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதுதவிர போர்வை, தலையணை, மெத்தைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதிலும் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.
இதில் ஆந்திரா, பீகார், ஒடிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 1½ மாதமாக வேலையில்லாமல் தவித்தனர். இதில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்தந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், செங்கல் சூளையில் வேலைசெய்தவர்கள் முகாம்களில் உள்ளனர்.
இதற்கிடையே நாடு முழுவதும் ஊரடங்கால் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அந்தந்த மாநிலத்துக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைக்காக வந்த வெளிமாநில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
எனவே, அவர்களை சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால், ஒருசில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் எப்போது வரும்? அதற்கு முன்பதிவு நடைபெறுகிறதா? என்பதை அறிந்து கொள்வதற்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினமும் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அதுபோன்று வரும் நபர்கள் ரெயில் நிலையத்தில் தங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். அதை தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டு விட்டன. மேலும் நுழைவுவாயிலில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். ரெயில் நிலையத்துக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தக்க அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story