தூத்துக்குடியில் 4 ஆயிரம் கன்டெய்னர்களில் மரக்கட்டைகள் தேக்கம் - வெடித்து சேதம் அடைவதால் வியாபாரிகள் வேதனை


தூத்துக்குடியில் 4 ஆயிரம் கன்டெய்னர்களில் மரக்கட்டைகள் தேக்கம் - வெடித்து சேதம் அடைவதால் வியாபாரிகள் வேதனை
x
தினத்தந்தி 18 May 2020 10:30 PM GMT (Updated: 18 May 2020 5:00 PM GMT)

கொரோனா ஊரடங்கின் காரணமாக தூத்துக்குடியில் 4 ஆயிரம் கன்டெய்னர்களில் மரக்கட்டைகள் தேங்கி உள்ளன. அவை வெடித்து சேதம் அடைவதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மரத்தடி வர்த்தகத்தில் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. வ.உ.சி. துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படும் மரத்தடிகள், தென்காசி, செங்கோட்டை, திருச்சி, கோவை, பெங்களூரு, ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு நகரங்கள், கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து தீக்குச்சி தயாரிப்பதற்கான மரங்கள் மாதந்தோறும் 1,000 கன்டெய்னர்களும், எந்திரங்கள் பார்சல் செய்வதற்கான மரக்கட்டைகள் கோவை, பெங்களூருக்கு அதிக அளவிலும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

வழக்கமாக அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து மரத்தடிகள் இறக்குமதி நடைபெறுவது இல்லை. பிப்ரவரி மாதம் முதல் மரத்தடி இறக்குமதி அதிகரிக்க தொடங்கும். தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை மரத்தடி இறக்குமதி அதிகரிக்கும். 6 மாதங்கள் மரத்தடி இறக்குமதி நடைபெறாமல் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் மீண்டும் இறக்குமதி தொடங்கியது. ஏற்கனவே இறக்குமதி செய்வதற்காக ஆர்டர் கொடுத்த மரக்கட்டைகள் பிப்ரவரி மாதம் முதல் தூத்துக்குடிக்கு வரத் தொடங்கியது.

ஊரடங்கால் தேக்கம்

மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து விட்டது. ஆனாலும் ஏற்கனவே கொடுத்த ஆர்டரின் பேரில் தொடர்ச்சியாக மரத்தடிகளும், மரக்கட்டைகளும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், இவற்றை விற்பனைக்காக கொண்டு செல்ல முடியவில்லை. முன்பு தினமும் 100 கன்டெய்னர்கள் வந்தால், 90 கன்டெய்னரில் உள்ள மரக்கட்டைகள் உடனடியாக விற்பனையாகிவிடும். தற்போது லாரி போக்குவரத்து குறைவாக இருப்பதால், 10 சதவீதம் மட்டுமே மரக்கட்டைகள் விற்பனையாகி வருகின்றன.

இதுவரை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த 4 ஆயிரம் கன்டெய்னர் தேக்கு உள்ளிட்ட மரக்கட்டைகள் மற்றும் 10 கப்பல்களில் வந்த பெரிய மரத்தடிகள் அனைத்தும் குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் புதிதாக வரும் கன்டெய்னர்களை இறக்கி வைக்க போதுமான இடம் வசதி இல்லாததால், கொழும்பு துறைமுகத்தில் 3 ஆயிரம் கன்டெய்னர்கள் உள்ளன.

தொழில் முடக்கம்

ஏற்கனவே கொடுத்த ஆர்டரின்படி ஜூன் மாதம் 15-ந் தேதி வரை மரக்கட்டைகள் வந்து கொண்டே இருக்கும். அடுத்த மாதம் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் கன்டெய்னர் மரக்கட்டைகள் வர உள்ளன. ஆனால், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட மரக்கட்டைகள் விற்பனை ஆகாமல் தூத்துக்குடியில் தேங்கி கிடக்கின்றன.

அதேநேரத்தில் வெயில் காரணமாக மரத்தடிகள் வெடித்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருவதாகவும் மர வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மரம் அறுவை மில்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மரத்தொழில் முடங்கி கிடக்கிறது.

தொழிலாளர்கள் வேலை இழப்பு

இதுகுறித்து மரக்கட்டை விற்பனையாளர் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டம் தென்மாநிலங்களில் மரத்தடி மற்றும் மரக்கட்டைகள் விற்பனையில் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. தூத்துக்குடியில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மரங்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்பட்டு உள்ள மரங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் தேங்கி கிடக்கிறது.

தூத்துக்குடியில் மரங்களை இறக்கி, வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்கு போதுமான ஊழியர்களும் இல்லை. பஸ் போக்குவரத்து இல்லாததால் ஊழியர்கள் பணிக்கு வர முடியாத நிலை உள்ளது. மரத்தடி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1,000 தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் வேலை இழந்து உள்ளனர்.

இலவச மின்சாரம்

அதே போன்று 500-க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் வங்கியில் கடன் வாங்கி மரங்களை இறக்குமதி செய்து உள்ளனர். இந்த மரங்களை 3 மாதத்துக்குள் விற்பனை செய்து வங்கி கடனை செலுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் செலுத்த தவறும் பட்சத்தில் மேற்கொண்டு அவர்கள் வங்கியில் கடன்பெற முடியாது. தற்போது கொரோனாவால் இறக்குமதி செய்யப்பட்ட மரங்களை விற்பனை செய்ய முடியவில்லை.

இதனால் அந்த இறக்குமதியாளர்கள் அனைவரும் நொடிந்துவிட்டனர். அவர்கள் தொழிலை தொடருவது மிகுந்த சிரமம் ஆகும். அதே போன்று மர அறுவை ஆலைகளும் இயங்காததால் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு ஊரடங்கு காலத்தில் இறக்குமதியாளர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி சலுகை அளித்தும், மரம் அறுவை ஆலைக்கு இலவச அல்லது மானிய மின்சாரம் வழங்கி, தொழிலை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story