கோவில்பட்டியில் ஊரடங்கில் கோர விபத்து: நின்ற லாரி மீது கார் மோதி தாய்-மகன்கள் உள்பட 4 பேர் பலி


கோவில்பட்டியில் ஊரடங்கில் கோர விபத்து: நின்ற லாரி மீது கார் மோதி தாய்-மகன்கள் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 18 May 2020 11:00 PM GMT (Updated: 18 May 2020 5:54 PM GMT)

கோவில்பட்டியில் ஊரடங்கில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய்-2 மகன்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த அத்தைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அழகு லட்சுமணன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (வயது 45). இவர்களுக்கு மகேந்திரன் (16), மாரிச்செல்வன் (13), நாகராஜன் (3) ஆகிய 3 மகன்கள் இருந்தனர்.

அங்குள்ள பள்ளியில் மகேந்திரன் பிளஸ்-1 வகுப்பும், மாரிச்செல்வன் 8-ம் வகுப்பும் படித்தனர். நாகராஜன், அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தான்.

உறவினர் இல்ல விழா

நேற்று முன்தினம் சித்ரா, கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் நடந்த விழாவுக்கு குழந்தைகளுடன் செல்ல திட்டமிட்டார். தற்போது கொரோனா ஊரடங்கால் பஸ்கள் இயக்கப்படாததால், சித்ரா தன்னுடைய கணவரின் நண்பரான, கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சி நடு தெருவை சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் பாண்டியனின் (வயது 25) காரில் குழந்தைகளுடன் இலுப்பையூரணிக்கு சென்றார். ரமேஷ் பாண்டியன், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இரவு 10.30 மணியளவில் விழா முடிந்ததும், அங்கிருந்து சித்ரா தன்னுடைய குழந்தைகளுடன் காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த காரை ரமேஷ் பாண்டியன் ஓட்டி வந்தார்.

லாரி மீது கார் மோதல்

கோவில்பட்டி-இளையரசனேந்தல் ரோடு பகுதியில் சென்றபோது, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டிப்பர் லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக கார் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. இதில் ரமேஷ் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சித்ரா, மகேந்திரன், மாரிச்செல்வன், நாகராஜன் ஆகிய 4 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தாய்-2 மகன்கள் பலி

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சித்ரா, மகேந்திரன், மாரிச்செல்வன், நாகராஜன் ஆகிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சித்ரா, மாரிச்செல்வன், நாகராஜன் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். மகேந்திரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீசார் விசாரணை

இறந்த ரமேஷ் பாண்டியனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டியில் ஊரடங்கில் உறவினரின் இல்ல விழாவுக்கு சென்று திரும்பியபோது, நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய்-2 மகன்கள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story