நெல்லையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது; தூத்துக்குடி, தென்காசியில் 21 பேர் பாதிப்பு
மராட்டியத்தில் இருந்து நெல்லைக்கு வந்த மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. இதேபோல், தூத்துக்குடி, தென்காசியில் 21 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நெல்லை,
மராட்டிய மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் இருந்து வருகிறவர்கள், நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் அங்குள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா அலுவலக வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இவ்வாறு கடந்த 2 நாட்களில் 754 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தில் 12 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆண்கள், 8 பெண்கள், 2 மாத பெண் குழந்தை இதில் அடங்குவர். அவர்கள் அனைவரும் நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களையும் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 206 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து விட்டார். மீதி 141 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6 பேரில் 2 பேர் பெண்கள் ஆவர். அவர்களில் பொட்டல்புதூரை சேர்ந்த கணவன், மனைவி, மகன் ஆகியோரும் அடங்குவர். மீதமுள்ள 3 பேரும் சுரண்டை அருகே உள்ள மேலமருதப்பபுரம், சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயகிபுரம், புதுப்பட்டியை சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்து உள்ளது. அதில் 40 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 30 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர மும்பையில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மேலும் 359 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அந்த பரிசோதனை முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 28 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்து உள்ளனர். நேற்று சோதனைச்சாவடி அருகே உள்ள தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கி உள்ளவர்களிடம் எடுக்கப்பட்ட சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில், மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோன்று சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story