நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கிய அரசு அலுவலகங்கள் - சிறப்பு பஸ்களில் பணிக்கு வந்தனர்


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கிய அரசு அலுவலகங்கள் - சிறப்பு பஸ்களில் பணிக்கு வந்தனர்
x
தினத்தந்தி 19 May 2020 4:45 AM IST (Updated: 19 May 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின. ஊழியர்கள் சிறப்பு பஸ்களில் பணிக்கு வந்தனர்.

நெல்லை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் மட்டும் குறிப்பிட்ட அளவு அரசு ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வால் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என்று அரசு அனுமதி அளித்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று அனைத்து அரசு துறை அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் அனைத்து துறை அலுவலகங்களும் முழுவீச்சில் செயல்பட்டது. ஊழியர்கள் தேங்கிய கோப்புகளை சரிபார்த்து, பணிகளை விரைவுப்படுத்தினர். அவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணிபுரிந்தனர்.

பெரும்பாலான ஊழியர்கள் தங்களது மோட்டார் சைக்கிள், கார்களில் அலுவலகத்துக்கு வந்து சென்றனர். மற்ற அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு சென்று வர வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊழியர்கள் செல்லும் வகையில் பஸ் இயக்கவில்லை என்று ஊழியர்கள் சிலர் வாக்குவாதம் செய்தனர்.

இதேபோல் பிற ஊர்களில் இருந்தும் நெல்லைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் ஏறி, முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்தனர். அவர்களது அடையாள அட்டைகளை கண்டக்டர்கள் வாங்கி சரிபார்த்தனர். மாலையில் ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல அதே வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. சில அரசு ஊழியர்கள் ரெயிலில் சீசன் டிக்கெட் எடுத்து அலுவலகத்துக்கு வந்து சென்றனர். அவர்கள் ரெயில் இயக்கப்படாததால் போக்குவரத்து வசதி இன்றி சிரமப்பட்டனர்.

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் நேற்று முதல் இயங்க தொடங்கின. ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊழியர்கள் வந்து பணி செய்து வந்தனர். மற்ற அனைத்து அலுவலகங்களிலும் நேற்று முதல் ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தொடங்கின. இங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஊழியர்கள் இடைவெளி விட்டு அமர்ந்து பணியாற்றினர். அனைத்து ஊழியர்களும் முககவசம் அணிந்து இருந்தனர். மேலும் தாலுகா அலுவலகங்களும் இயங்கின. அரசு ஊழியர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story