திருப்பத்தூர் மாவட்டத்துக்கு புதிய திட்ட அலுவலரை தமிழக அரசு விரைவில் நியமிக்கும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்


திருப்பத்தூர் மாவட்டத்துக்கு புதிய திட்ட அலுவலரை தமிழக அரசு விரைவில் நியமிக்கும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
x
தினத்தந்தி 18 May 2020 11:45 PM GMT (Updated: 18 May 2020 8:20 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு புதிய திட்ட அலுவலரை தமிழக அரசு விரைவில் நியமிக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தொடங்கப்பட்டு 5 மாதங்கள் ஆகிறது. கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலகம், சிறப்புப்பூஜைகள் செய்து புதிதாகத் தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் பங்கேற்றுப் பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக முகமைத் திட்ட அலுவலரை தமிழக அரசு விரைவில் நியமனம் செய்யும். 6 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் ஊராட்சிகளுக்கு நடைபெறும் பணிகளுக்கு உடனடியாக ஒப்புதல் பெற்று, பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டும்.

அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நமது மாவட்டத்துக்கு வந்துள்ள தொழிலாளர்களை இந்தத் திட்டத்தில் முழு அளவில் பயன்படுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு கிராமங்களில் உள்ள குடிசை வீடுகளை இந்திரா மற்றும் பசுமை வீடுகள் வழங்கி கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும்.

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டகளில் இருந்து வரும் நபர்களை தங்க வைக்க சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அனைத்துக் கிராம பகுதிகளிலும் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புதிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலராக எம்.பிச்சாண்டி பதவி ஏற்றுக்கொண்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், உதவி இயக்குனர் ஊராட்சிகள் அருண், உதவி இயக்குனர் தணிக்கை சுதா, செயற்பொறியாளர் எஸ் சீனிவாசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரவி, ராஜேந்திரன், குணசேகரன், அஸ்வின் உள்பட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட ஊரக வளர்ச்சித்துறை முகமை அலுவலர்கள் கலந்து கெண்டனர். அலுவலக கண்காணிப்பாளர் ஜி.ராஜா நன்றி கூறினார்.

Next Story