பேரணாம்பட்டு தாலுகாவில் ரூ.33¾ லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர் வாரும் பணி - அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்


பேரணாம்பட்டு தாலுகாவில் ரூ.33¾ லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர் வாரும் பணி - அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 May 2020 5:00 AM IST (Updated: 19 May 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு தாலுகாவில் ரூ.33¾ லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

பேரணாம்பட்டு,

தமிழக முதல்-அமைச்சரின் குடி மராமத்துத் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் 42 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3486.56 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களுக்கு பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

நான்காம் கட்டமாக 2020-21ம் நிதியாண்டில் ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு தாலுகாவில் ரெட்டிமாங்குப்பம் ஏரி, வேலூர் தாலுகாவில் மூஞ்சூர்பட்டு ஏரி, அணைக்கட்டு தாலுகாவில் புத்தூர் ஏரி மற்றும் பூதூர் ஏரி, கே.வி. குப்பம் தாலுகாவில் கீழாலாத்தூர் ஏரி, காவனூர் ஏரி, காட்பாடி தாலுகாவில் எருக்கம்பட்டு ஏரி, விண்ணம்பள்ளி ஏரி, இளையநல்லூர் ஏரி, சேர்க்காடு ஏரி, கண்டிப்பேடு ஏரி, செம்பராயநல்லூர் ஏரி, கெம்பாராஜபுரம் ஏரி.

குடியாத்தம் தாலுகாவில் கூடநகரம் ஏரி ஆகிய 14 ஏரிகள் 17.91 கிலோ மீட்டர் தூரம் கரைகளை பலப்படுத்தவும், 103.89 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் தூர் வாரவும், 23 மதகுகள் பழுதுப்பார்த்தல், 2 மதகுகள் மறு கட்டுமானம் மேற்கொள்ளவும், 8 கலிங்குகள் பழுதுப் பார்க்கவும் இதன் மூலம் 1272. 83 ஹெக்டேர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெறவும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 157 குளம், குட்டைகள் ஆகியவை ரூ.11.26 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது.

பேரணாம்பட்டு தாலுகாவில் ரூ.33.70 லட்சம் மதிப்பீட்டில் ராஜக்கல் ஊராட்சியில் உள்ள ரெட்டிமாங்குப்பம் ஏரி தூர்வாரும் பணிக்கான பூமிபூஜையை அமைச்சர் கே.சி. வீரமணி, கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். குடி மராமத்துத் திட்டத்தின் கீழ் நடைபெறும் தூர் வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகள் அகற்றி ஏரியின் உள் வரத்து, வெளி வரத்து கால்வாய்கள் சீரமைத்து, கரையை பலப்படுத்துதல், மதகு மற்றும் கலிங்குகள் பழுதுப் பார்க்கும் பணி, கால்வாய் மற்றும் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் எல்லைகள் நிர்ணயம் செய்து, எல்லை கற்கள் நடும் பணி மேற்கொண்டு நீர் வள ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் மழைநீர் சேமிப்பதன் மூலம் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும், விவசாய பாசன வசதிகள் பெருகிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

விழாவில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரம் செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற் பொறியாளர்கள் குணசீலன், விஸ்வநாதன், உதவி பொறியாளர்கள் கோபி, தமிழ்செல்வன், பேரணாம்பட்டு தாசில்தார் முருகன், ஒன்றிய ஆணையாளர்கள் செல்வக்குமார், ஹேமலதா, மண்டல துணை வட்டாட்சியர் வடிவேல் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Next Story