குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் 25 நாட்களுக்கு பிறகு கடைகளை திறக்க கலெக்டர் அனுமதி


குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் 25 நாட்களுக்கு பிறகு கடைகளை திறக்க கலெக்டர் அனுமதி
x
தினத்தந்தி 18 May 2020 10:45 PM GMT (Updated: 18 May 2020 9:24 PM GMT)

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடைகளை திறக்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கினார்.

பூந்தமல்லி, 

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் காஞ்சீபுரம் மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்கு மாற்றப்பட்டது. இரு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த 25 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வீடுகள் தோறும் கொண்டு சென்று வழங்கப்பட்டு வந்தது.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து 4-ம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளதால் நேற்று குன்றத்தூர் மற்றும் மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகங்களுக்கு சென்று மீண்டும் கடைகளை திறக்க அனுமதி கோரினர்.

அப்போது மாங்காடு பேரூராட்சி அலுவலகம் வந்து இருந்த குன்றத்தூர் சப்-கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் சிலரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. பழனி, பேரூராட்சி அதிகாரிகளும் உடன் இருந்தனர். அப்போது வியாபாரிகள் வைத்த கோரிக்கையை ஏற்று இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சமூக விலகலுடனும், அரசு அறிவித்துள்ள நேரக்கட்டுப்பாட்டுடனும் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் கடைகளை திறக்கலாம் என்றும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இறைச்சி கடைகள் இயங்கலாம் எனவும் மாவட்ட கலெக்டர் பொன்னையா அனுமதி அளித்தார்.

இதையடுத்து 25 நாட்களுக்கு பிறகு இந்த பகுதிகளில் மீண்டும் கடைகள் திறக்கப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story