ஸ்ரீபெரும்புதூரில் 3 குழந்தைகளை கொன்று துப்புரவு தொழிலாளி தற்கொலை - குடும்பத்தகராறில் விபரீதம்


ஸ்ரீபெரும்புதூரில் 3 குழந்தைகளை கொன்று துப்புரவு தொழிலாளி தற்கொலை - குடும்பத்தகராறில் விபரீதம்
x
தினத்தந்தி 19 May 2020 7:30 AM IST (Updated: 19 May 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் 3 குழந்தைகளை கொன்று துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவரது மனைவி கோவிந்தம்மாள் என்ற துளசி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி (12), ஷாலினி (10) என்ற 2 மகள்களும், சேதுராமன் (8) என்ற மகனும் இருந்தனர்.

ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஆறுமுகம், கோவிந்தம்மாள் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.

தகராறு ஏற்படும்போது கோவிந்தம்மாள் கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விடுவார். பின்னர் ஆறுமுகம் மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல ஆறுமுகத்திற்கும் கோவிந்தம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை வேலைக்கு சென்ற கோவிந்தம்மாள் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூத்த மகள் ராஜேஸ்வரி கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தாள்.

இதை பார்த்த கோவிந்தம்மாள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஆறுமுகம் மற்றும் 2 குழந்தைகளை தேடினர். ஆறுமுகம் ஊருக்கு அருகே உள்ள சுடுகாடு பக்கத்தில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் 2 குழந்தைகளை தேடும்போது அருகே இருந்த கிணற்றில் ஷாலினி, சேதுராமன் இருவரும் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகம், ராஜேஸ்வரி, ஷாலினி, சேதுராமன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 மகள்கள் மற்றும் மகனை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story