நீண்ட நாட்கள் ஓடாமல் இருந்ததால் மெக்கானிக் கடைகளில் குவியும் மோட்டார் சைக்கிள்கள்


நீண்ட நாட்கள் ஓடாமல் இருந்ததால் மெக்கானிக் கடைகளில் குவியும் மோட்டார் சைக்கிள்கள்
x
தினத்தந்தி 19 May 2020 3:55 AM IST (Updated: 19 May 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவால் நீண்ட நாட்கள் ஓடாமல் இருந்த மோட்டார் சைக்கிள்கள் தற்போது மெக்கானிக் கடைகளில் குவிந்து வருகின்றன.

தஞ்சாவூர்,

ஊரடங்கு உத்தரவால் நீண்ட நாட்கள் ஓடாமல் இருந்த மோட்டார் சைக்கிள்கள் தற்போது மெக்கானிக் கடைகளில் குவிந்து வருகின்றன.

மோட்டார் சைக்கிள்கள் பழுது

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பெரும்பாலானோர் வேலைகளுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வீடுகளில் இருந்து அலுவலகங்களுக்கு அவர்களை ஒய்யாரமாக அழைத்துச் செல்லும் தங்களின் மோட்டார் சைக்கிள்கள் நீண்ட நாட்கள் ஓடாமல் இருந்ததால் பழுதாகின. மேலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி ‘ஸ்டார்ட்’ ஆகாமல் அப்படியே விட்ட இடத்தில் நின்று கொண்டு இருந்தன.

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு 25 மாவட்டங்களில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் எனவும், தனியார் நிறுவனங்களுக்கும் சில தளர்வுகளை அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

மெக்கானிக்கடைகள் திறப்பு

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி முதல் 34 வகை தனிக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்கள் ஓடாமல் முடங்கி கிடந்த மோட்டார் சைக்கிள்கள் பராமரிப்பு பணிகளுக்காக மெக்கானிக் கடைகளை தேடி சென்ற வண்ணம் உள்ளன. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் பழுது பார்க்க வருவதால், மெக்கானிக்குகளும் மோட்டார் சைக்கிளை சரி செய்வதற்கு நாட்கள் ஆகின்றன..

பேட்டரிகள் செயல் இழப்பு

இதுகுறித்து தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள நியூ காவேரி நகரை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் செந்தில்குமார் கூறியதாவது:-

மோட்டார் சைக்கிள்கள் நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பெரும்பாலானவற்றின் பேட்டரிகள் செயல் இழந்து ‘ஸ்டார்ட்’ ஆகாமல் நிற்கும். பேட்டரியை சார்ஜ் செய்து மோட்டார் சைக்கிள்களை சரி செய்வோம். இன்னும் சில மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் நின்றதால், அதன் பெட்ரோல் காய்ந்து ‘ஸ்டார்ட்’ ஆகாமல் நின்றிருக்கும். அந்த மோட்டார் சைக்கிள்களின் கார்ப்பரேட்டரை கழற்றி பழுது நீக்குவோம்.

மேலும் மோட்டார் சைக்கிள்களின் ஒயர்கள் மற்றும் சங்கிலிகள் துருப்பிடித்து சிக்கி நிற்கும். அவற்றை ஆயில் விட்டு சரிசெய்தும், தேவைப்பட்டால் வயர்களை புதிதாக மாற்றியும் மோட்டார் சைக்கிள்களை சரிசெய்து வழங்குவோம். ஊரடங்கு உத்தரவால் நீண்ட நாட்கள் மெக்கானிக்கடை திறக்காததால் ஏராளமான வண்டிகள் பழுதுபார்க்க வந்தன. எனது கடைக்கு மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்ட வண்டிகள் வருகின்றன.

2 நாட்களில் சரி செய்வேன்

மேலும் எனது கடையில் 4 பேர் வேலை பார்ப்பதால் பழுது பார்க்க வரும் வண்டிகளை ஒன்று அல்லது 2 நாட்களில் சரி செய்து வழங்கி வருகிறோம். ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட வண்டிகள் வந்தால் அன்று வேலை செய்ய முடியும் வண்டிகளை மட்டும் வேலைக்கு எடுத்துக்கொண்டு மற்ற வண்டிகளை மறுநாள் வருமாறு அனுப்பி வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story