சென்னையில் இருந்து சத்தீஸ்கார், பீகாருக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்: 4 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்
சென்னையில் இருந்து 3 சிறப்பு ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டன. இதில் 4 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர். இன்றும் 3 சிறப்பு ரெயில்கள் செல்கின்றன.
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பிழைப்புக்கும், சாப்பாட்டுக்கும் வழியின்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களை நோக்கி புறப்பட்ட வண்ணம் உள்ளனர். ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டெல்லி, ஆந்திரா, பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு கடந்த 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் 44 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் 56 ஆயிரத்து 500 வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
அதே வேளையில் சென்னையில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த மாநிலங்களை நோக்கி செல்கின்றனர். இதனை அறிந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் தினந்தோறும் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.’ என்று அறிவித்தார்.
இந்தநிலையில் சென்னை சென்டிரலில் இருந்து நேற்று 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி சத்தீஸ்கார் மாநிலத்துக்கு மதியம் 3 மணியளவில் ஒரு சிறப்பு ரெயிலும், பீகார் மாநிலத்துக்கு இரவு 7 மணி மற்றும் இரவு 9 மணி என 2 சிறப்பு ரெயில்கள் புறப்பட்டு சென்றன. இதில் சத்தீஸ்கார் ரெயிலில் 1,068 தொழிலாளர்களும், இரவு 7 மணிக்கு புறப்பட்ட பீகார் ரெயிலில் 1,494 தொழிலாளர்களும் பயணித்தனர்.
இரவு 9 மணிக்கு இயக்கப்பட்ட பீகார் ரெயிலில் 1,600 வடமாநில தொழிலாளர்கள் புறப்பட்டனர். அதன்படி 3 சிறப்பு ரெயில்கள் மூலம் 4,132 வடமாநில தொழிலாளர்கள் சென்னையில் இருந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு விண்ணப்பிக்காமல் நேரடியாக ரெயில் நிலையத்துக்கு வந்த வடமாநில தொழிலாளர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்களை திருப்பி அனுப்பினர்.
இந்தநிலையில் சென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு பீகாருக்கும், இரவு 10 மணிக்கு மேற்கு வங்காளத்துக்கும் சிறப்பு ரெயில்கள் செல்கின்றன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாகாலாந்துக்கு இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு செல்கிறது. இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்கள் வரிசையாக இயக்கப்படுவதால் சென்னையில் தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story