கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதாக அரசை கண்டித்து ‘மராட்டியத்தை காப்போம்' போராட்டம் - பா.ஜனதா அறிவிப்பு
கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதாக அரசை கண்டித்து மராட்டியத்தை காப்போம் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய பாரதீய ஜனதா சார்பில் நேற்று வீடியோ கான்பரன்சிங் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பின் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:- மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது.
இதை கண்டித்து மகாராஷ்டிரா பச்சாவ் (மராட்டியத்தை காப்போம்) வருகிற 22-ந் தேதி முதல் பாரதீய ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும். பாரதீய ஜனதா தலைவர்களும், தொண்டர்களும் தங்களது வீட்டு முன்னால் திரண்டு மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்புவார்கள்.
மேலும் பாரதீய ஜனதா தலைவர்கள் கோரிக்கைகளை தாலுகா மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story