தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு: புதுவையில் மின்துறை ஊழியர்கள் போராட்டம்


தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு: புதுவையில் மின்துறை ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 May 2020 4:19 AM IST (Updated: 19 May 2020 4:19 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

‘கொரோனா’ அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை சீர்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 7, காரைக்கால், மாகே, ஏனாமில் தலா ஒரு டிவிஷன்கள் உள்ளன. புதுவை மின்துறையில் என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என 2,500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மின்துறையை தனியார் மயமாக்கும் அறிவிப்புக்கு மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


">இதுதொடர்பாக மின்துறை அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி, கண்காணிப்பு பொறியாளர் முரளி ஆகியோரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.


இந்தநிலையில் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தொழில்நுட்ப சான்றிதழாளர் (ஐ.டி.ஐ.) நலச்சங்கத்தின் கவுரவ தலைவர் லட்சுமணசாமி தலைமையில் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் மின்துறை ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் மத்திய அரசு அறிவித்துள்ள புதுவை மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். 
 
உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்துக்குள் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முக கவசம் அணிந்தும் 200க்கும் மேற்பட்டவர்கள் வரிசையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Next Story