தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெளியூர் செல்ல அனுமதிசீட்டு பெறுவதற்காக குவிந்த பொதுமக்கள்


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெளியூர் செல்ல அனுமதிசீட்டு பெறுவதற்காக குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 May 2020 4:38 AM IST (Updated: 19 May 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெளியூர் செல்ல அனுமதிசீட்டு பெறுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெளியூர் செல்ல அனுமதிசீட்டு பெறுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி முன்பு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் செல்லவும், மாவட்டத்திற்குள் செல்லவும் அனுமதிச்சீட்டு (இ-பாஸ்) பெற வேண்டும் என அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிச்சீட்டு பெற வேண்டாம் என்றும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு அனுமதிச்சீட்டு பெற வேண்டும் எனவும் அறிவித்தது. மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் அனுமதிச்சீட்டு பெற வேண்டும் என அறிவித்து இருந்தது.

குவிந்த பொதுமக்கள்

முன்பு அனுமதிச்சீட்டு அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வெப்சைட்டில் பதிவு செய்து அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு மாநில வெப்சைட்டுக்கு tne-pass.tne-ga.org அனுப்பி அங்கிருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன்படி அங்கிருந்து அனுமதிச்சீட்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் எந்த பகுதிக்கு செல்கிறார்கள், அவர்கள் செல்லும் பகுதி, கொரோனா தொற்று பாதித்த பகுதியா? என ஆய்வு செய்து அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.

இதை அறியாத பொதுமக்கள் நேற்று 100-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தாங்கள் அனுமதிச்சீட்டு கேட்டு விண்ணப்பித்தும், தங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தனர். காலை 9 மணி முதலே அவர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து அவர்களிடம் விளக்கி கூறினர்.

கலைந்து சென்றனர்

அப்போது வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வருபவர்கள் குறித்த விவரங்களை மட்டும் கொடுங்கள். மற்றவர்கள் மாநில வெப்சைட்டுக்கு அனுப்புங்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி அனுமதி சீட்டு வழங்குவார்கள் என தெரிவித்தனர். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story