ஊரடங்கால் பாதிப்பு: வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.17 கோடி சிறப்பு கடன் கலெக்டர் வழங்கினார்


ஊரடங்கால் பாதிப்பு:  வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.17 கோடி சிறப்பு கடன் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 19 May 2020 4:43 AM IST (Updated: 19 May 2020 4:43 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நீலகிரியில் உள்ள மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.17½ கோடி சிறப்பு கடனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வரவில்லை. அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வந்த வியாபாரிகள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், தினக்கூலி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு புதிதாக இளைஞர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து, வங்கிகளிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10 பேர் இணைந்து சுய உதவிக்குழு தொடங்கி, கடன் வேண்டி உரிய ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், கோவிட்-19 சிறப்பு கடன் திட்டம் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த...

நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட இயக்குனர் பாபு முன்னிலை வகித்தார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், கலெக்டர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத் ஆகியோர் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடன் வழங்கினர். அப்போது கலெக்டர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய கூட்டுறவு வங்கி கடன் வழங்குதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் மற்ற வங்கிகளும் தங்களுக்கான கடன் வழங்கும் இலக்கை, ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றார். இதில் வங்கி மேலாண்மை இயக்குனர் வசந்தா கலந்துகொண்டார்.

2,473 மகளிர் சுயஉதவிக்குழுக்களில் 24,730 பேருக்கு ரூ.12 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் சிறப்பு கடன், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் பணிமனை வைத்திருப்பவர்கள் 1,500 பேருக்கு ரூ.3 கோடியே 75 லட்சம், வேன் ஓட்டுநர்கள் 200 பேருக்கு ரூ.50 லட்சம், முடிதிருத்துபவர்கள் 100 பேருக்கு ரூ.25 லட்சம், 9 டாம்கோ சுய உதவிக்குழுக்களில் 110 பேருக்கு ரூ.56 லட்சம் என மொத்தம் 26,640 பயனாளிகளுக்கு கடன் தொகை ரூ.17 கோடியே 43 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story