புதுவையில் நாளை மதுக்கடைகள் திறப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு


புதுவையில் நாளை மதுக்கடைகள் திறப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 May 2020 5:11 AM IST (Updated: 19 May 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் நாளை முதல் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன. இன்று முதல் பஸ், ஆட்டோ, கார்களை இயக்கலாம். கடைகள், ஓட்டல்கள் திறப்பு நேரத்தை அதிகரிப்பது என அமைச்சரவை கூட்டத்தில் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது.

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு 4-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் அதிகப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய அமைச்சரவை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நேற்று மதியம் நடந்தது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

இதன்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசால் புதுவையில் 6 பேரும், காரைக்காலில் 2 பேரும் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது புதுவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் பணியின் நிமித்தமாக கேரள மாநிலம் கண்ணூர் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களை கலந்தாலோசித்து பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளோம். மத்திய அரசு பல புதிய அறிவிப்புகளை கொடுத்துள்ளது. குறிப்பாக காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளும் அதே நேரம் வரை இயங்கலாம். தற்போது மாலை 5 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

புதுவை மாநிலத்திற்குள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். ஆட்டோக்களில் 2 பேர் மட்டும் தான் அமர்ந்து செல்ல வேண்டும். 4 சக்கர வாகனங்களை பொறுத்தவரை மொத்தம் 3 பேர் டிரைவர் பக்கத்தில் ஒருவர் பின்னால் 2 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். புதுச்சேரி எல்லை பகுதிக்குள் வாடகை கார்கள் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓட்டல்களின் நேரமும் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடைகளில் சமூக இடைவெளி விட்டு மக்கள் பொருட்களை வாங்க வேண்டும். அதே நேரத்தில் முககவசம் அணிய வேண்டியது அவசியம். திருமணங்களை பொறுத்த அளவில் சுமார் 50 பேர் கலந்து கொள்ளலாம். ஈமச் சடங்குகளில் 20 பேர் அனுமதிக்கப்படுவார்கள். இப்படி பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாம் கடைகளைத் திறந்து இருக்கிறோம். தொழிற்சாலைகளுக்கும் அனுமதி தந்திருக்கிறோம். மக்கள் முடி திருத்த செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் உள்ளே வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதுவையில் இருந்து மக்கள் காரைக்கால் செல்வதற்கும் அங்கிருந்து புதுவைக்கு வருவதற்கும் பஸ்களை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்காக தமிழக அரசுடன் பேசி புதுவையில் இருந்து காரைக்காலுக்கு வழியில் எங்கும் நிற்காமல் பஸ் செல்ல நடவடிக்கை எடுப்போம்.

புதுச்சேரியில் நாளை (புதன்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் மதுக்கடைகள் திறந்திருக்கும். மதுக்கடைகளுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 2 நாட்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல்துறை, கலால்துறை, வருவாய் துறையை சேர்ந்தவர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மதுபானங்களுக்கு 50 சதவீதம் கோவிட் வரி (கொரோனா) விதிக்கப் படும்.

மாநிலத்தில் சகஜ நிலை வரவேண்டும். மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த தளர்வுகளை அளித்துள்ளோம்.

பெரிய மார்க்கெட், மீன் அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மீன் வியாபாரம் செய்பவர்களும் மீன் வாங்க செல்பவர்களும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். புதுவை அரசு ஒருபுறம் மாநில வருவாயை பெருக்குவதற்கும், மற்றொரு புறம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்கள் பணி புரிகின்றனர். இது தொடரவேண்டும்.

மாநில அரசுகள் வெளிமார்க்கெட்டில் கடன் வாங்க இருந்த அளவை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது புதுவை மாநிலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவது உள்பட மாநிலங்களுக்கு பல செலவினங்கள் உள்ளன. நலத்திட்டங்களை செயல் படுத்த நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சாரம் மாநில, மத்திய அரசுகளின் பொது பட்டியலில் உள்ளது. மத்திய அரசு மின்சார துறையை தன் கையில் எடுத்து அடக்கும் நடவடிக்கையை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.

புதுவை மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதனால் தான் பல தொழிற்சாலைகள் புதுவைக்கு வருகின்றன. விவசாயிகளால் நிம்மதியாக விவசாயம் செய்ய முடிகிறது.

இதை தனியாரிடம் ஒப்படைத்தால் இந்த திட்டத்தை நாம் நிறைவேற்ற முடியாது. இதுதொடர்பாக பிரதமருக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை எனக்கு எந்த பதிலும் வரவில்லை.

தற்போது மத்திய அரசு அனைத்து துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவை மக்கள் எதிர்க்கும் திட்டங்களாக உள்ளன. பா.ஜ.க.வின் தொழிற்சங்கங்கள் கூட இந்த திட்டங்களை எதிர்க்கின்றன. இதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய அளவில் கொரோனா பெரிய அளவில் இருந்து வருகிறது. 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது. எனவே வருகிற 31-ந் தேதி வரை தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கடைக்கு சென்றால் உடனே பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி வரவேண்டும்.

பணிக்கு செல்பவர்கள் பணியை முடித்துவிட்டு நேராக வீட்டுக்கு செல்ல வேண்டும். வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முக கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story